< Back
மாநில செய்திகள்
திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு - தாம்பரம் கமிஷனர் ரவி வழங்கினார்
சென்னை
மாநில செய்திகள்

திருட்டுப்போன ரூ.1 கோடி பொருட்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு - தாம்பரம் கமிஷனர் ரவி வழங்கினார்

தினத்தந்தி
|
22 May 2022 4:33 PM IST

திருட்டு வழக்குகளில் மீட்கப்பட்ட ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்களை உரியவர்களிடம் தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி ஒப்படைத்தார்.

தாம்பரம் கமிஷனரகம் தொடங்கப்பட்ட கடந்த 5 மாதங்கள் மட்டுமின்றி, 2021-ம் ஆண்டு முதல் நிலுவையில் இருந்த வழக்குகளையும் சேர்த்து கண்டுபிடிக்கப்பட்டு திருட்டுப்போன ரூ.1 கோடி மதிப்புள்ள நகைகள், மோட்டார் சைக்கிள்கள், செல்போன்கள் மீட்கப்பட்டன . அவற்றை உரியவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடந்தது. தாம்பரம் மாநகர போலீஸ் கமிஷனர் ரவி, திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட பொருட்களை உரியவர்களிடம் வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் போலீஸ் கமிஷனர் ரவி கூறியதாவது:-

ரவுடிகள் மீது நடவடிக்கை சென்னை புறநகர் பகுதிகளில் ரவுடி, கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தாம்பரம் மாநகர கமிஷனரகம் உருவாக்கப்பட்டது. கடந்த 5 மாதங்களில் 402 ரவுடிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. 2 காவல் மாவட்டங்களில் 23 கொலைகள் நடநதுள்ளது. அதில் 43 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். 87 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் தள்ளப்பட்டு உள்ளனர்.

எந்தவித குற்றங்களிலும் ஈடுபட மாட்டோம் என நன்னடத்தை பிணை உறுதிமொழி பத்திரத்தை 750 பேர் எழுதி கொடுத்து உள்ளனர். தாம்பரம் கமிஷனரகத்தில் 150 கிலோ கஞ்சா , 2,617 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டு ௧௪௧ பேர் கைதாகி உள்ளனர். அதிக ஒலி எழுப்பும் வாகனங்கள் நில மோசடி, இரட்டை நிலபத்திரம் தொடர்பான புகார்கள் நிறைய வருகின்றன.

இவற்றை விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சாலையில் அதிக ஒலி எழுப்பி வரும் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். வாகனங்களில் போலியான நபர்கள் 'ஸ்டிக்கர்'ஒட்டிச்செல்வதை கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் கூடுதல் கமிஷனர் காமினி, துணை கமிஷனர்கள் சிபி சக்கரவர்த்தி, குமார், சுப்புலட்சுமி, மூர்த்தி, கூடுதல் துணை கமிஷனர்கள் பொற்செழியன், ஆனந்தகுமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்