ராமநாதபுரம்
அடிப்படை வசதிகள் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகை
|அடிப்படை வசதிகள் கோரி தாலுகா அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
பரமக்குடி,
பரமக்குடி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கமுதக்குடி ஊராட்சியில் இந்திரா நகர் காலனி உள்ளது. இங்கு 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதிக்கு கமுதக்குடி ஊராட்சி தலைவர் அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் புறக்கணிப்பதாக கூறி நேற்று முன்தினம் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பரமக்குடி தாசில்தார் ரவி பேச்சுவார்த்தை நடத்திய பின் போராட்டத்தை கைவிட்டனர். இந்நிலையில் நேற்று பரமக்குடி தாசில்தார் அலுவலகத்திற்கு வந்த இந்திரா நகர் காலனி பொதுமக்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து தாசில்தார் ரவி தலைமையில், பரமக்குடி ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் தேவபிரியதர்ஷினி, போலீசார் முன்னிலையில் ஊராட்சி தலைவர் கவிதா மற்றும் பொதுமக்கள் சமாதான கூட்டம் நடந்தது.
கூட்டத்தில், குடிநீர் பைப் லைன், புதிய தண்ணீர் தொட்டி, சாலை வசதி, அங்கன்வாடி கட்டிடம் பராமரிப்பு உள்ளிட்டவை செய்து தரப்படுவதாக ஊராட்சி சார்பாக தெரிவிக்கப்பட்டது. இதனை நிறைவேற்றாவிட்டால் தங்களுடைய ரேஷன் கார்டு மற்றும் வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபடுவோம் என பொதுமக்கள் கூறி சென்றனர்.