கள்ளக்குறிச்சி
கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி
|கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி நடைபெற உள்ளது என்று கலெக்டர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி, மே.27-
தமிழ் வளர்ச்சி துறையின் (2021-2022) -ம் ஆண்டிற்கான மானிய கோரிக்கையில் நாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களான மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அம்பேத்கர், பெரியார், அண்ணா, கருணாநிதி ஆகியோர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கு இடையே பேச்சுப்போட்டி நடத்தி பரிசு, பாராட்டு சான்றிதழ் வழங்க அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு கள்ளக்குறிச்சி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் வருகிற 3-ந் தேதி கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான பேச்சுப்போட்டி காலை 10 மணியளவில் நடைபெறவுள்ளது. கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடைபெறும் இந்த பேச்சுப்போட்டியில் பங்குபெற்று வெற்றி பெறும் மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட அளவில் முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படவுள்ளது. எனவே கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்லூரி பயிலும் மாணவ, மாணவிகள் இந்த போட்டியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.பேச்சுப்போட்டி பற்றிய கூடுதல் விவரங்களுக்கு தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர், மாவட்ட கலெக்டர் அலுவலகம், விழுப்புரம். செல்போன் எண் 9786966833 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். மேற்கண்ட தகவல் கலெக்டர் ஸ்ரீதர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.