ஈரோடு
தாளவாடிக்கு தேவை தீயணைப்பு நிலையம்
|தீயை அணைக்க 35 கி.மீ. தூரம் வாகனம் வர வேண்டியிருப்பதால் தாளவாடிக்கு தேவை தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று பொதுமக்களின் நீண்ட நாள் கனவு நிறைவேறுமா? என காத்திருக்கிறாா்கள்.
ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப்பகுதி கர்நாடக மாநில எல்லையில் அமைந்துள்ளது. இங்கு சுமார் 80-க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்கள் உள்ளன.
விவசாயம் இங்குள்ளவர்களின் முக்கியத் தொழிலாக உள்ளது. கரும்பு, மஞ்சள், வாழை, முட்டைக்கோஸ், தக்காளி ஆகியவற்றை அதிக அளவில் பயிர் செய்து வருகின்றனர். கோடை காலங்களில் அதிக வெயிலின் தாக்கத்தால் அவ்வப்போது கரும்பு தோட்டத்தில் தீ விபத்து ஏற்படும். அதேபோல் தாளவாடி மற்றும் ஜீர்கள்ளி வனச்சரகத்தில் காட்டுத்தீ ஏற்படுவதும் தொடர் கதையாகி வருகிறது.
பொதுமக்கள் கோரிக்கை
தாளவாடியில் இருந்து சுமார் 35 கிலோமீட்டர் தொலைவில் ஆசனூரில் தீயணைப்பு நிலையம் உள்ளது. தாளவாடி பகுதியில் உள்ள கரும்புக்காடு மற்றும் வீடுகளில் தீ விபத்து ஏற்பட்டால் ஆசனூரில் இருந்து தீயணைப்பு வாகனம் மலைப்பாதை வழியாக வருவதற்குள் முற்றிலும் எரிந்து நாசம் ஆகிவிடுகிறது. எனவே தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதுபற்றி அப்பகுதிைய சேர்ந்த பொதுமக்கள் சிலர் கூறிய கருத்துகள் வருமாறு:-
அடிக்கடி தீ விபத்து
தொட்டமுதிகரையை சேர்ந்த விவசாயி கந்தசாமி:-
எங்கள் பகுதியில் கரும்பு அதிக அளவில் சாகுபடி செய்து வருகின்றனர். கோடைகாலங்களில் மின்கசிவு, வெயிலின் தாக்கம் காரணமாக கரும்பு தோட்டத்தில் அடிக்கடி தீ விபத்து ஏற்படுகிறது.
எங்கள் ஊரில் தீ விபத்து ஏற்பட்டால் சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஆசனூரில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும் அதற்குள் தீயில் அனைத்தும் எரிந்து நாசமாகிவிடுகிறது. இதனால் அதிகளவில் பொருட் சேதம் ஏற்படுகிறது. எனவே தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும்.
நீண்ட நாள் கனவு
மல்லன்குழி கிராமத்தைச் சேர்ந்த சதீஷ்குமார்:-
எங்கள் பகுதியில் தீயணைப்பு நிலையம் இல்லாத காரணத்தால் தீ விபத்து ஏற்பட்டால் தீயை அணைக்க முடியாமல் அனைத்து பொருட்களுமே எரிந்து நாசமாகி விடுகிறது. தீயணைப்பு வாகனம் வரும் வரை காத்திருக்க முடியாது. நாங்கள் முயன்றாலும் தீயை அணைக்க முடிவது இல்லை. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுகிறார்கள். எனவே தாளவாடியில் தீயணைப்பு நிலையம் எங்கள் பகுதிக்கு அவசியம் தேவை. இது எங்களின் நீண்ட நாள் கனவாக உள்ளது.
வனவிலங்குகள் நலன் கருதி...
தொட்டகாஜனூரை சேர்ந்த விவசாயி ரவி:-
ஆண்டுதோறும் கோடை காலங்களில் அருகில் உள்ள வனப்பகுதியில் காடு பற்றி எரிவது தொடர் கதையாகி வருகிறது. காட்டுத்தீயை அணைக்க தொலைவில் உள்ள ஆசனூரில் இருந்து தான் தீயணைப்பு வாகனம் வர வேண்டும். அதற்குள் வனப்பகுதி சுற்றிலும் காட்டுத்தீ பரவி விடுகிறது.. அங்குள்ள வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன.
வனவிலங்குகள் நலன் கருதி தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எளிதாக விரைவாக சென்று தீயை அணைக்க வசதியாக அமையும்.
உயிரிழப்பு
ராமபுரம் கிராமத்தை சேர்ந்த ஹரிஷ் குமார்:-
தாளவாடியை சுற்றி அதிக அளவில் மலைக்கிராமங்கள் உள்ளன. இப்பகுதியில் ஆடு, மாடுகள் கிணற்றில் தவறி விழுந்தாலோ அல்லது வாகனங்கள் தீப்பிடித்தாலோ அல்லது குளம், குட்டையில் யாராவது தவறி விழுந்தாலோ அவர்களை காப்பாற்ற தீயணைப்பு வீரர்கள் இல்லாததால் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுகிறது. எனவே தாளவாடியில் தீயணைப்பு நிலையம் அமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். இதுகுறித்து மக்கள் பிரதிநிதிகள் சட்டசபை கூட்டத்தொடரின்போது அரசின் கவனத்துக்கு கொண்டுவரவேண்டும். அப்போது இந்த பிரச்சினை விரைவில் தீர வழி பிறக்கும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.