< Back
மாநில செய்திகள்
இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்
மாநில செய்திகள்

இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்திடுக - ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
10 May 2023 10:59 AM IST

சட்டம் ஒழுங்கை சீரழிக்கும் வகையில், இந்துக்கடவுள்களை இழிவுபடுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அற்றிக்கையில் கூறிருப்பதாவது:-

தி.மு.க. அரசு ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்தே, இந்திய அரசமைப்புச் சட்டத்திற்கு முற்றிலும் முரணான வகையில், மதத்தையும், மதக் கடவுள்களையும் இழிவுபடுத்திப் பேசுவது என்பது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்திய நாட்டில் வாழும் அனைத்து மக்களுக்கும் சமயச் சுதந்திர உரிமை அளிக்கப்பட்டு இருக்கிறது.

இதன்படி, அனைத்து மக்களும் தனிப்பட்ட முறையில் ஒரு மதத்தின்மீது நம்பிக்கை வைத்து வழிபாடு செய்வதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆனால், எந்த ஒரு மதத்தையும் இழிபடுத்துவது என்பது இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. ஒரு மதத்தை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. அவ்வாறு ஒருவர் ஒரு மதத்தை இழிவுபடுத்திப் பேசினால் அவர்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் அரசுக்கு உண்டு.

மாண்புமிகு அம்மா அவர்களுடைய ஆட்சிக் காலத்தில், ஒரு மதத்தினரை இன்னொரு மதத்தினர் இழிவுபடுத்திப் பேசுவது என்ற பேச்சுக்கே இடமில்லாத சூழ்நிலை இருந்தது. மாண்புமிகு அம்மா அவர்களின் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு அமைதிப் பூங்காவாக விளங்கியதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்று சொன்னால் அது மிகையாகாது.

சென்ற ஆண்டு, கடலூர் மாவட்டம், சிதம்பரத்தில் உலகப் புகழ் பெற்ற நடராஜர் மற்றுத் தில்லைக்காளி குறித்து ஒரு யூ டியூப் சேனல் கொச்சைப்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டது. இதனைக் கண்டித்து இராண்டாயிரத்திற்கும் மேற்பட்ட சிவனடியார்கள் போராட்டத்தில் இறங்கினர். இதற்குக் கண்டனம் தெரிவித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நான் அறிக்கை வெளியிட்டதோடு, மத மோதல்களை உருவாக்க வழிவகுக்கும் இதுபோன்ற வீடியோவை வெளியிட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இதனை முளையிலேயே கிள்ளி எறிய வேண்டுமென்றும் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களை வலியுறுத்தி இருந்தேன்.

இந்தச் சூழ்நிலையில், விடுதலை என்னும் புனைப்பெயரில் ஒருவர் ஒரு நிகழ்ச்சியில் இதிகாச புராணமான இராமாயணத்தையும், மக்கள் வணங்கக்கூடிய ராமர், லட்சுணர், சீதை, அனுமார் போன்ற இந்துக் கடவுள்களை இழித்தும், பழித்தும் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. இது கடும் கண்டனத்திற்குரியது. இது, 'ஒன்றே குலம் ஒருவனே தேவன்' என்ற பேரறிஞர் அண்ணாவின் கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. இதற்கு பல்வேறு அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன. காவல் துறையினரிடம் புகாரும் கொடுக்கப்பட்டுள்ளது. எந்த மதத்தினரை புண்படுத்திப் பேசினாலும் அதனை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கும்.

இதுபோன்ற செயல்பாடுகள் சட்டம் ஒழுங்கை சீரழிக்கவும், மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் விளைவிக்கவும், மத மோதல்களை உருவாக்கவும் வழி வகுக்கும் என்பதால், முதல்-அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாகத் தலையிட்டு இந்துக் கடவுள்களை இழிவுபடுத்தியவர்கள்மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், இனி வருங்காலங்களில் இதுபோன்ற நிகழ்வுகள் நிகழாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமென்றும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்