கிருஷ்ணகிரி
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக பொறுப்பேற்பு
|கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக கே.எம்.சரயு நேற்று பொறுப்பேற்று கொண்டார். பின்னர் அவர் கூறுகையில், அரசு திட்டங்கள் மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.
புதிய கலெக்டர்
கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 12-வது கலெக்டராக தீபக் ஜேக்கப் கடந்த பிப்ரவரி மாதம் 6-ந் தேதி நியமனம் செய்யப்பட்டார். அவர் 99 நாட்கள் பணியில் இருந்த நிலையில், தஞ்சாவூர் மாவட்ட கலெக்டராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு நிறுவனத்தின் இணை மேலாண்மை இயக்குனரான பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி கே.எம்.சரயு கிருஷ்ணகிரி மாவட்ட புதிய கலெக்டராக நியமிக்கப்பட்டார். இவர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தின் 13-வது கலெக்டராக பொறுப்பேற்றுக் கொண்டார்.
புதிய கலெக்டராக பொறுப்பேற்ற பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலைகள் சூழ்ந்த, தொழிற்சாலைகள், விவசாய வளம் நிறைந்த மாங்கனி நகர் கிருஷ்ணகிரிக்கு கலெக்டராக பொறுப்பேற்றுள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன் இந்த மாவட்டத்தின் கலெக்டராக பணிபுரிந்த தீபக் ஜேக்கப் கல்லூரியில் எனக்கு சீனியர் ஆவார்.
அவர் இந்த மாவட்டம் குறித்த விவரங்களை எனக்கு வழங்கியுள்ளார். கல்வி, சுகாதாரம், கிராமங்களின் வளர்ச்சி உள்ளிட்டவற்றில் அதிக கவனம் செலுத்தியும், அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாக சென்றடையும் வகையிலும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிகாரிகள் வாழ்த்து
கேரள மாநிலம் கொச்சியை சேர்ந்த சரயு கடந்த 1992-ம் ஆண்டு பிறந்தவர். பி.டெக்., எம்.ஏ., (பப்ளிக் மேனேஜ்மெண்ட்) படித்த இவர், 2015-ம் ஆண்டு ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெற்றார். புதுக்கோட்டை மாவட்ட உதவி கலெக்டர் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றிய அவர், இறுதியாக பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பின் இணை நிர்வாக இயக்குனராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில், முதன் முறையாக கிருஷ்ணகிரி மாவட்டத்தின் கலெக்டராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
புதிதாக பொறுப்பேற்ற கலெக்டர் சரயுவுக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) வேடியப்பன் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.