விழுப்புரம்
கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது துணிச்சலாக நடவடிக்கை எடுங்கள்போலீசாருக்கு அமைச்சர் பொன்முடி அறிவுரை
|கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுவோர் மீது போலீசார் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமைச்சர் பொன்முடி அறிவுரை கூறினார்.
விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவது குறித்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து காவல்துறை, வருவாய்த்துறை மற்றும் மருத்துவத்துறை சார்ந்த அலுவலர்களுக்கான ஆய்வுக்கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி தலைமை தாங்கி, மாவட்டத்தில் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து காவல்துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளுடன் கலந்தாலோசனை செய்தார். மாவட்ட கலெக்டர் சி.பழனி, துரை.ரவிக்குமார் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் புகழேந்தி, டாக்டர் லட்சுமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் வடக்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. கண்ணன், விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. (பொறுப்பு) பகலவன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) மோகன்ராஜ், கூடுதல் கலெக்டர் சித்ராவிஜயன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், திண்டிவனம் சப்-கலெக்டர் கட்டா ரவிதேஜா, விழுப்புரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இரும்புக்கரம்
கூட்டத்தில் அமைச்சர் பொன்முடி பேசியதாவது:-
கள்ளச்சாராயத்தை கட்டுப்படுத்துவதில் எந்தவித சமரசமின்றி இரும்புக்கரம் கொண்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயத்தை முற்றிலும் இல்லை என்ற நிலையை உருவாக்கிடும்பொருட்டு தீவிர நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொடர் நடவடிக்கையாக நகரம் மற்றும் கிராமப்பகுதிகளில் வருவாய்த்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள், தங்கள் பகுதிகளில் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுகின்றதா என்பது குறித்து கண்காணிப்பதோடு, கள்ளச்சாராயம் குறித்த தகவல் கிடைக்கப்பெற்றால் உடனடியாக மாவட்ட நிர்வாகத்திற்கோ அல்லது காவல்துறைக்கோ முதல் தகவல் அளிப்பவர்களாக செயல்பட வேண்டும்.
காவல்துறையை சேர்ந்தவர்கள் தங்கள் கட்டுப்பாட்டு பகுதிகளுக்குள் எந்த சூழ்நிலையிலும் கள்ளச்சாராயத்தை அனுமதிக்கக்கூடாது என்ற நிலைப்பாட்டினை எடுத்துக்கொண்டு உறுதியுடன் பணியாற்ற வேண்டும். யாருடைய தலையீடு இருந்தாலும் அச்சமின்றி தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாவட்டத்திலுள்ள 9 சோதனைச்சாவடிகளில் முழு கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும்.
கள்ளச்சாராயம் பயன்பாட்டிலிருந்து பொதுமக்களை விடுவித்து பாதுகாப்பது காவல்துறையின் கடமை மற்றும் பொறுப்பு ஆகும். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கள்ளச்சாராயம் அருந்தி சிகிச்சை பெற்று வருபவர்கள் முழுமையாக குணமடைந்து அவரவர் வீடுகளுக்கு திரும்பிச்சென்ற பின்பும் மருத்துவர்கள் முழுமையாக கண்காணித்து சிகிச்சை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
துணிச்சலான நடவடிக்கை
அதனை தொடர்ந்து அவர், நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
விழுப்புரம் மாவட்டத்தில் போலி மதுபான விற்பனை மற்றும் கள்ளச்சாராய விற்பனையை முற்றிலும் தடுக்க ஏதுவாக, வருவாய்த்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினோம். மதுரவாயில் பகுதியில் இருந்து மரக்காணம் பகுதிக்கு 100 லிட்டர் மெத்தனால் வந்துள்ளது. அதில் 5 லிட்டர் அளவுக்கு பயன்படுத்தி உள்ளனர். மீதம் 95 லிட்டர் மெத்தனால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் உத்தரவின்பேரில், மரக்காணம் சம்பவம் போன்று கள்ளச்சாராய மரணம், இனி மாவட்டத்தில் எங்கும் நடைபெறாமல் தடுப்பதற்கு, தயவு தாட்சனை இல்லாமல் துணிச்சலாக நடவடிக்கை எடுக்க, ஆய்வுக்கூட்டத்தில் காவல்துறைக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதேபோல் வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு, தங்கள் பகுதியில் எங்காவது போலி மதுபானம் மற்றும் கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தால், உடனடியாக காவல்துறைக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
அதன் பின்னர், மேல்பாதி கோவில் பிரச்சினை குறித்து அமைச்சர் பொன்முடியிடம் நிருபர்கள் கேள்வி எழுப்பியதற்கு அவர் கூறுகையில், மேல்பாதி கிராமத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான திரவுபதி அம்மன் கோவிலில், சாதிய வேறுபாடு இல்லாமல் அனைவரும் வழிபட அனுமதி அளிக்க வேண்டும் என்று நாங்கள் ஏற்கனவே கூறியுள்ளோம். இதுபற்றி, இங்கே வந்தவர்களிடமும், மாவட்ட கலெக்டரிடமும் தெரிவித்துள்ளேன். பட்டியலின மக்கள் இன்று முதல் கோவிலுக்குள் செல்லலாம். அக்கிராமத்தில் வசிப்பவர்கள் அனைவரும் நடந்ததை மறந்து, இனி ஒற்றுமையாக இருக்க வேண்டும். இந்த பிரச்சினையை வைத்து, சிலர் அரசியல் செய்ய நினைக்கிறார்கள். அவர்கள் செய்ய நினைப்பதை மக்கள் ஏற்றுக்கொள்ளக்கூடாது என்றார்.