தாட்கோ 50-வது ஆண்டு பொன்விழா: சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டார் அமைச்சர் கயல்விழி
|தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையினை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் வெளியிட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் பெற்றுக்கொண்டார்.
சென்னை,
சென்னை எம்.ஆர்.சி நகர் இமேஜ் அரங்கத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் 50-வது பொன்விழா ஆண்டு முன்னிட்டு தாட்கோ சிறப்பு அஞ்சல் தலையினை ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் இன்று (14.02.2024) வெளியிட தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக்கழக தலைவர் உ.மதிவாணன் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் தெரிவித்ததாவது:-
முன்னாள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியால் ஆதிதிராவிடர் மக்களுக்கு அரசின் சார்பில் வீடுகளை கட்டிக் கொடுக்கும் நிறுவனமாக 1974-ம் ஆண்டில் தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) துவங்கப்பட்டது. சமூகத்தின் அடித்தட்டு நிலையில் உள்ள ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களை பொருளாதார ரீதியில் மேம்படச்செய்யும் வகையில் பல்வேறுபட்ட தொழில் முனைவு மற்றும் திறன் மேம்பாட்டிற்கான அரசின் திட்டங்களை செயல்படுத்திடும் நிறுவனமாக செயல்பட்டு வருகின்றது.
தாட்கோ நிறுவனமானது பொருளாதார மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் விவசாயம், சிறுதொழில், வணிகம் மற்றும் போக்குவரத்து ஆகிய துறைகளில் தொழில் புரிந்து பொருளீட்டும் உதவும் வகையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு திட்டத்தொகையில் 35 விழுக்காடு அல்லது அதிகபட்சம் ரூ 3.50 இலட்சம் மானியம் வழங்கப்படுகிறது. நிதி உதவி பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.2 இலட்சத்திலிருந்து 2022-2023-ம் ஆண்டு முதல் ரூ.3 இலட்சமாக உயர்த்தி தமிழ்நாடு முதல்-அமைச்சர் ஆணையிட்டுள்ளார்.
தொழில் முளைவோர் மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 18 வயது முதல் 65 வயது வரையுள்ள தனிநபர் மற்றும் குழுக்கள் தங்களது பொருளாதார நிலையினை உயர்த்திக்கொள்ள விவசாயம் தொடர்பான வாகனங்கள், இலகுரக, கனரக வாகனங்கள் மற்றும் மகிழுந்து வாகனம் வாங்குதல், பால் பண்னை மற்றும் கோழிப்பண்னை அமைத்தல் மேலும் பல்பொருள் அங்காடி, எழுதுபொருள்விற்பனை, உடற்பயிற்சி கூடம், அழகு நிலையம், வெதுப்பகம், தையலகம், மின்சாதன விற்பனை, உணவகம், வாகன உதிரிபாகங்கள் விற்பனை, துணிக்கடை அமைத்தல் மற்றும் கட்டுமான பொருட்கள் விற்பனை போன்ற வருமானம் ஈட்டும் தொழில்கள் புரிந்திட உதவும் வகையில் வங்கிகள் மூலம் மானியத்துடன் கடன் உதவி வழங்கப்படுகிறது.
இளைஞர்களுக்கான திறன்மேம்பாட்டினை ஊக்குவிக்கவும் அவர்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்துவதற்கு தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகம் மற்றும் தேசிய திறன் மேம்பாட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் பல்வேறு திறன் மேம்பாட்டு பயிற்சிகள் தாட்கோ மூலம் வழங்கப்பட்டு வருகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்கள் சமூகத்தில் முன்னேற்றம் அடைய வேண்டி தமிழ்நாடு முதல்-அமைச்சர் தாட்கோ மூலமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் கயல்விழி தெரிவித்தார்.