< Back
மாநில செய்திகள்
ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தர் கைது

தினத்தந்தி
|
3 Nov 2022 6:45 PM GMT

கறவை மாடு கடன் வழங்க ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய தாட்கோ அலுவலக பதிவறை எழுத்தர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம்:

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் தாலுகா வடபொன்பரப்பி கிராமத்தை சேர்ந்தவர் கணேசன் மகன் குணசீலன் (வயது 27). இவருடைய மனைவி பாரதி, அப்பகுதியில் காமராஜர் பெயரில் நடத்தி வரும் மகளிர் சுய உதவிக்குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இவர் தனக்கும், தன்னுடன் உறுப்பினராக இருக்கும் 13 பேருக்கும் தாட்கோ மூலம் கறவை மாடு கடன் பெறுவதற்காக கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு விழுப்புரம் கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். அதற்காக சில முக்கிய ஆவணங்களையும் அவர்கள் 14 பேரும் தங்கள் விண்ணப்பத்துடன் இணைத்திருந்தனர்.

ரூ.10 ஆயிரம் லஞ்சம்

இந்த ஆவணங்களை சரிபார்த்து கறவை மாடு கடன் வழங்குவதற்காக தாட்கோ மாவட்ட மேலாளருக்கு பரிந்துரை செய்வதற்காக அங்குள்ள அலுவலகத்தில் பதிவறை எழுத்தராக பணியாற்றி வரும் விழுப்புரம் அருகே ராம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் (35) என்பவர் ஒவ்வொருவரிடமும் தலா ரூ.1,000 வீதம் மொத்தம் ரூ.14 ஆயிரம் லஞ்சமாக தரும்படி கேட்டுள்ளார்.

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சுய உதவிக்குழுவினர், தாங்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்கள், தங்களிடம் அவ்வளவு பணம் இல்லை என்றும் எப்படியாவது கறவை மாடு கடன் வழங்கும்படியும் கூறியுள்ளனர். அதற்கு ரூ.4 ஆயிரத்தை குறைத்துக்கொண்டு ரூ.10 ஆயிரம் தரும்படியும், பணம் கொடுத்தால் மட்டுமே கறவை மாடு கடன் தர முடியும் என கறாராக கூறிய சுரேஷ்குமார், அந்த பணத்தை அலுவலகத்திற்கு வந்து தன்னிடம் நேரில் கொடுக்கும்படி கூறினார்.

பதிவறை எழுத்தர் கைது

லஞ்சம் கொடுக்க விரும்பாத பாரதி இதுகுறித்து தனது கணவர் குணசீலனிடம் தெரிவித்தார். உடனே அவர், விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் ரசாயன பொடி தடவிய பணத்தை குணசீலனிடம் கொடுத்து அதை சுரேஷ்குமாரிடம் கொடுக்குமாறு போலீசார் கூறினார்கள். அவர்கள் கூறிய அறிவுரைப்படி ரசாயன பொடி தடவிய பணத்தை நேற்று மதியம் குணசீலன் எடுத்துக்கொண்டு விழுப்புரத்தில் உள்ள தாட்கோ மாவட்ட மேலாளர் அலுவலகத்திற்கு சென்று அங்கிருந்த பதிவறை எழுத்தர் சுரேஷ்குமாரிடம் கொடுத்தார்.

அந்த லஞ்சப்பணத்தை வாங்கியபோது அங்கு ஏற்கனவே மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு பால்சுதர், இன்ஸ்பெக்டர் அன்பழகன், ஏட்டுகள் விஜயதாஸ், பாலமுருகன், மூர்த்தி ஆகியோர் விரைந்து சென்று சுரேஷ்குமாரை கையும், களவுமாக பிடித்தனர்.

அதனை தொடர்ந்து அந்த அலுவலகத்தில் முக்கிய ஆவணங்கள் சிலவற்றை கைப்பற்றிய போலீசார், சுரேஷ்குமாரை விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். மேலும் அவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை போலீசார், விழுப்புரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்