ஈரோடு
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில்20 அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு;கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தகவல்
|தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 20 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் 20 இடங்களில் அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளதாக கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறிஇருப்பதாவது:-
நெல் கொள்முதல் நிலையங்கள்
தடப்பள்ளி-அரக்கன்கோட்டை பாசன பகுதியில் அறுவடைக்கு தயாராக நெல் பயிர்கள் வளர்ந்து உள்ளன. எனவே விவசாயிகளிடம் இருந்து நேரடியாக நெல் கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழகம் சார்பில் 20 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு உள்ளன.
அதன்படி கள்ளிப்பட்டி, ஏளூர், டி.என்.பாளையம், நஞ்சைபுளியம்பட்டி, கரட்டடிபாளையம், என்.ஜி.பாளையம், புதுவள்ளியம்பாளையம், புதுக்கரைபுதுார், காசிபாளையம், கூகலூர், கருங்கரடு, சவுண்டப்பூர், பெருந்தலையூர், மேவானி, நஞ்சைதுறையம்பாளையம், கொண்டையம்பாளையம் உள்ளிட்ட இடங்களில் நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டன.
17 சதவீதம் ஈரப்பதம்
நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் பதிவு செய்வதற்கு கிராம நிர்வாக அதிகாரியின் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், விவசாயியின் ஆதார் அட்டை நகல், விவசாயியின் வங்கி கணக்கு புத்தக நகல், விவசாயியின் பாஸ்போர்ட் அளவு 2 புகைப்படங்களுடன் வரவேண்டும்.
அரசு நிர்ணயித்தபடி தரம் மற்றும் 17 சதவீத ஈரப்பதம் உள்ள நெல் மட்டுமே கொள்முதல் செய்யப்படும். 'ஏ' கிரேடு நெல் குறைந்தபட்ச ஆதார விலையாக ரூ.2 ஆயிரத்து 60, ஊக்கத்தொகையாக ரூ.100 என மொத்தம் குவிண்டாலுக்கு ரூ.2 ஆயிரத்து 160-க்கு கொள்முதல் செய்யப்படும். இதேபோல் பொது ரக நெல் ஆதார விலை ரூ.2 ஆயிரத்து 40, ஊக்கத்தொகையாக ரூ.75 என மொத்தம் ரூ.2 ஆயிரத்து 115-க்கு கொள்முதல் செய்யப்படும். கொள்முதல் செய்யப்படும் நெல்லுக்கான தொகை விவசாயிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி தெரிவித்து உள்ளார்.