கிருஷ்ணகிரி
தனியார் மருந்து கடைகளில் டாக்டரின் ஆலோசனை இல்லாமல் மாத்திரை வழங்கக்கூடாதுகலெக்டர் சரயு அறிவுறுத்தல்
|கிருஷ்ணகிரி:
தனியார் மருந்து கடைகளில் டாக்டரின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்து, மாத்திரைகள் வழங்கக்கூடாது என்று ஆய்வுக்கூட்டத்தில் கலெக்டர் சரயு தெரிவித்தார்.
ஆய்வு கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பில் டெங்கு தடுப்பு நடவடிக்கை மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்த ஆய்வுக்கூட்டம் நடந்தது. கலெக்டர் சரயு தலைமை தாங்கினார். நலப்பணிகள் இணை இயக்குனர் பரமசிவம், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் ரமேஷ்குமார், அரசு மருத்துவக்கல்லூரி முதல்வர் பூவதி மற்றும் டாக்டர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குடிநீர் தொட்டிகள், நீர் தேங்கும் இடங்களில் குளோரினேசன் செய்யவும், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் ஆகியவற்றை அப்புறப்படுத்தி சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். மழைநீர் தேங்காத வகையில் அப்புறப்படுத்தவும் கொசு உற்பத்தியாவதை தடுக்கும் வகையில் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்.
விழிப்புணர்வு நோட்டீஸ்
டெங்கு நோய் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்க வேண்டும். மேலும், அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மொட்டை மாடியிலுள்ள மேல்தளத்தில் மழைநீர் தேங்காமல் இருக்க கொசு புழு உற்பத்தியாகாமல் இருக்க வாரம் ஒருமுறை குளோரினேசன் செய்ய வேண்டும. தனியார் மருந்து கடைகளில் மருத்துவரின் ஆலோசனைகள் இல்லாமல் மருந்துக்கடை உரிமையாளர்கள் மருந்து மாத்திரைகள் வழங்கக்கூடாது.
இவ்வாறு அவர் பேசினார்.