டி20 உலகக்கோப்பை: இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது - சரத்குமார்
|இந்திய அணியில் நடராஜனின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது என்று சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை,
9-வது டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்கா இணைந்து நடத்துகின்றன. அடுத்த மாதம் (ஜூன்) 1-ந்தேதி முதல் 29-ந்தேதி வரை நடக்கும் இந்த கிரிக்கெட் திருவிழாவில் 20 அணிகள் பங்கேற்கின்றன. அவை 4 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகளும் இந்த பிரிவில் அங்கம் வகிக்கின்றன.
டி20 உலகக் கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ஒரு தமிழக வீரருக்கு கூட வாய்ப்பு கிடைக்காதது ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்துள்ளது. அந்த வகையில் நடப்பு ஐபிஎல் தொடரில் மிகச் சிறப்பான செயல்பாட்டை வெளிப்படுத்தி வரும் தமிழக வீரரான நடராஜன், தினேஷ் கார்த்திக், சாய் சுதர்சன் ஆகியோரின் பெயர்கள் இடம் பெறவில்லை.
இந்த நிலையில் இது குறித்து நடிகரும் பாஜக நிர்வாகியுமான சரத்குமார் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
"டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டதில், சிறந்த வேகப்பந்து வீச்சாளரும், தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் நடராஜன் அவர்களின் பெயர் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது. வாய்ப்பு இருப்பின் அவரை தேர்வு செய்ய தேர்வுக்குழுவினர் மறுபரிசீலனை செய்யலாம்" என்று தெரிவித்துள்ளார்.