< Back
மாநில செய்திகள்
மனிதர்களுக்கு பரவாது;பன்றி காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை
நாமக்கல்
மாநில செய்திகள்

மனிதர்களுக்கு பரவாது;பன்றி காய்ச்சலுக்கு அச்சப்பட தேவையில்லை

தினத்தந்தி
|
1 April 2023 6:45 PM GMT

மனிதர்களுக்கு பரவாது என்பதால் பன்றி காய்ச்சல் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா சிங் அறிவுறுத்தி உள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பன்றிகள் சாவு

ராசிபுரத்தை அடுத்த ஆர்.புதுப்பாளையம் கால்நடை மருந்தகத்திற்கு உட்பட்ட கல்லாங்குலத்தில் ராஜாமணி என்பவருக்கு சொந்தமான பன்றி பண்ணை உள்ளது. அங்கு கடந்த மாதம் 9-ந் தேதி 2 பன்றிகள் திடீரென இறந்தன. பின்னர் அந்த பன்றிகள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி நோய் குறியியல் துறைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அங்கு பிரேத பரிசோதனை நடந்தது.

மேலும் அவற்றில் இருந்து எடுக்கப்பட்ட மாதிரிகள் சென்னையில் உள்ள மத்திய கால்நடை மருத்துவக் கல்லூரி பல்கலைக்கழக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது.

ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல்

ஆய்வில் பன்றிகளுக்கு ஆப்பிரிக்கன் பன்றி காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. அதன் பிறகு கால்நடை பராமரிப்பு துறையின் மூலம் கால்நடை உதவி டாக்டர்கள் தலைமையில் 4 குழுக்கள் அமைக்கப்பட்டு பண்ணையின் சுற்று வட்டார பகுதிகளில் நோய் பரவல் மற்றும் அதன் தன்மை குறித்து தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

மேலும் அது குறித்து சென்னை கால்நடை பராமரிப்பு மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனருக்கு அறிக்கை அனுப்பப்பட்டது. பின்னர் இயக்குனரின் உத்தரவை அடுத்து 18 பன்றி குட்டிகள் மனிதாபிமான முறையில் கால்நடை பராமரிப்பு துறையால் அழிக்கப்பட்டன.

அச்சப்பட தேவையில்லை

தொடர்ந்து உயிரி பாதுகாப்பு முறைகளை பின்பற்றி மிக ஆழமான குழியை தோண்டி பன்றி குட்டிகள் புதைக்கப்பட்டன. அதேபோல் மேலும் ஒரு ஆண்டுக்கு கால்நடை பராமரிப்பு துறையால் பண்ணை கண்காணிக்கப்பட உள்ளது.

இந்த வகை பன்றி காய்ச்சல் பன்றிகளில் இருந்து பன்றிகளுக்கு மட்டுமே பரவும். பிற விலங்குகளுக்கோ அல்லது மனிதர்களுக்கோ பரவாது. எனவே பொதுமக்கள் இதுகுறித்து அச்சப்பட தேவையில்லை.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்