ராமநாதபுரம்
சுவாமி-அம்பாள் திருக்கல்யாண வைபவம்
|ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமேசுவரம் கோவிலில் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாக்கலமாக நடைபெற்றது.
ராமேசுவரம்,
ஆடி திருக்கல்யாண திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ராமேசுவரம் கோவிலில் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி கோலாக்கலமாக நடைபெற்றது.
திருக்கல்யாணம்
ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மகா சிவராத்திரி திருவிழா மிக சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல் இந்த ஆண்டின் ஆடி திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது. மிக முக்கிய நிகழ்ச்சியாக நேற்று இரவு சுவாமி, அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. அதற்காக நேற்று அதிகாலை 3 மணி அளவில் தபசு மண்டகப்படியில் இருந்து பர்வதவர்த்தினி அம்பாள் பூக்களால் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கோவிலுக்கு எழுந்தருளினார்.
இரவு 7 மணிக்கு தெற்கு நந்தவன பகுதியில் அமைந்துள்ள திருக்கல்யாண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் ராமநாதசாமியும், பர்வதவர்த்தினி அம்பாளும் பஞ்ச மூர்த்திகளுடன் எழுந்தருளினர். 7.50 மணியளவில் சாமி, அம்பாளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்து திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது.
தங்க கேடயம்
தொடர்ந்து சாமி, அம்பாளுக்கு சிறப்பு தீபாராதனை, பூஜை நடைபெற்றது. திருக்கல்யாண நிகழ்ச்சியில் ராணி லட்சுமி நாச்சியார், இளையராஜா நாகநாதசேதுபதி, தக்கார் பழனிகுமார், கோவில் இணை ஆணையர் மாரியப்பன், மேலாளர் மாரியப்பன், ஆய்வாளர் பிரபாகரன், சூப்பிரண்டு பாலசுப்பிரமணியன், காசாளர் ராமநாதன், அகில இந்திய யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், நிர்வாகிகள் வெள்ளைச்சாமி, பத்மநாபன், மலைச்சாமி, ரவி மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருக்கல்யாண திருவிழாவில் கடைசி நாளான வருகின்ற 29-ந் தேதி கோவிலில் இருந்து சுவாமி, அம்பாள் மற்றும் பெருமாள் தங்க கேடயத்தில் கெந்த மாதன பர்வதம் மண்டகப்படிக்கு மறுவீட்டுக்கு எழுந்தருளும் நிகழ்ச்சியோடு திருவிழா முடிவடைகின்றது.