< Back
மாநில செய்திகள்
தொடர் மழையால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும்-விவசாயிகள் மகிழ்ச்சி
சிவகங்கை
மாநில செய்திகள்

தொடர் மழையால் கரும்பு விளைச்சல் அதிகரிக்கும்-விவசாயிகள் மகிழ்ச்சி

தினத்தந்தி
|
7 Nov 2022 5:38 AM GMT

சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்


சிவகங்கை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் கரும்பு மகசூல் அதிகரிக்கும் என விவசாயிகள் கூறினர்.

கரும்பு பயிர் தீவிரம்

தமிழகம் முழுவதும் தற்போது வடகிழக்கு பருவ மழை பெய்து வருவதால் பல்வேறு மாவட்டங்களில் இரவு, பகலாக கன மழை பெய்து வருகிறது. இதையடுத்து பல்வேறு இடங்களில் உள்ள ஆறுகள், கண்மாய்கள், குளங்கள், ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகரித்து வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வடகிழக்கு பருவ மழை தென் மாவட்டமான சிவகங்கை மாவட்டத்திலும் தீவிரம் அடைந்துள்ளதையடுத்து கடந்த 20 நாட்களாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு இடங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

இதனால் பல்வேறு இடங்களில் உள்ள கண்மாய்கள், ஊருணிகள் நிரம்பி தற்போது மறுகால் பாய்ந்து வருகிறது. சிவகங்கை மாவட்டத்தை பொறுத்தவரை கண்மாய் பாசனம், ஏரி பாசனம் மற்றும் வைகையாற்று பாசனம் மூலம் விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது பெய்து வரும் தொடர் மழையால் கண்மாய்கள் நிரம்பி வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்த நிலையில் பல்வேறு இடங்களில் உழவார பணி, நெல் நடவு பணி, உரமிடுதல், களை எடுத்தல் என விவசாய பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுதவிர சில இடங்களில் காய்கறிகள், வாழை, பயிர் வகைகள் என பயிரிடப்பட்டு விவசாயிகள் பாதுகாத்து வருகின்றனர். கல்லல், சிங்கம்புணரி பகுதியில் தற்போது தொடர்ந்து பெய்து வரும் மழையை பயன்படுத்தி முன்கூட்டியே விவசாயிகள் தங்களது வயல்களில் கரும்பு பயிரிட்டு பாதுகாத்து வருகின்றனர்.

கரும்பு விலை

தமிழர் திருநாளான பொங்கல் விழாவிற்கு இன்னும் 70 நாட்கள் வரை உள்ளதால் கரும்பு பயிருக்கு உரமிடுதல், தண்ணீர் பாய்ச்சுதல் என பல்வேறு பணிகளை செய்து வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறியதாவது, மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையை பயன்படுத்தி ஏற்கனவே நெல் விவசாயம் செய்து அதை பராமரித்து வருகிறோம். மீதமுள்ள காலியான இடங்களில் கரும்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு இருந்தோம்.

பொங்கல் விழாவிற்கு இன்னும் 2 மாதம் மட்டும் உள்ள நிலையில் தொடர் மழையால் கரும்பு பயிர் மூலம் அதிக அளவு மகசூல் கிடைக்கும் என நம்புகிறோம். சென்றாண்டு போதுமான இடங்களில் கரும்பு போதிய விளைச்சல் இல்லாததால் கரும்பின் விலையும் அதிகமாக இருந்தது. ஆனால் இந்தாண்டு நல்ல மழை பெய்து வருவதால் கரும்பு விலை குறையும் என்றனர்.

மேலும் செய்திகள்