மதுரை
சாவில் சந்தேகம் என புகார்: மதுரையில் 6 மாத பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுப்பு
|மதுரை வில்லாபுரத்தில் சாவில் சந்தேகம் என பொதுமக்கள் புகார் கூறியதால் புதைக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
மதுரை வில்லாபுரத்தில் சாவில் சந்தேகம் என பொதுமக்கள் புகார் கூறியதால் புதைக்கப்பட்ட 6 மாத பெண் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது.
6 மாத குழந்தை புதைப்பு
மதுரை வில்லாபுரம் அகஸ்தியர் தெருவை சேர்ந்தவர் காளீஸ்வரன், ஆட்டோ டிரைவர். இவரது மனைவி கார்த்திகை ஜோதி. 5 ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு திருமணம் முடிந்து 3½ வயதில் ஒரு மகனும், 6 மாதத்தில் பெண் குழந்தையும் உள்ளது. இந்த நிலையில் வீட்டில் இருந்த பெண் குழந்தை திடீரென இறந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து பெற்றோர் யாருக்கும் தகவல் தெரிவிக்காமல் வீட்டின் அருகில் காலி இடத்தில் குழி தோண்டி புதைத்ததாக தெரிகிறது.
இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் அவனியாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் பார்த்திபன் தலைமையில் போலீசார் விரைந்து வந்து காளீஸ்வரன், கார்த்திகை ஜோதியிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் குழந்தை இறந்ததால் புதைத்ததாக தெரிவித்தனர். இது போலீசாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. மேலும் கிராம நிர்வாக அதிகாரி புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவும் செய்தனர்.
உடல் தோண்டி எடுப்பு
இதையடுத்து புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை போலீசார் தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்தனர். அதன்படி நேற்று தாசில்தார் முத்துப்பாண்டி, வருவாய் அதிகாரிகள் பிருந்தா, மணிகண்டன் ஆகியோர் முன்னிலையில் குழந்தையின் உடல் தோண்டி எடுக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து போலீசார் கூறும்போது, பிறந்ததில் இருந்து அந்த பெண் குழந்தை உடல் நிலை பாதிக்கப்பட்டு இருந்தது. மதுரை அரசு ஆஸ்பத்திரியில் காண்பித்தபோது குழந்தைக்கு இதயத்தில் பிரச்சினையும், மூச்சு விடுவதில் சிரமம் இருந்ததும் தெரியவந்தது. மேலும் மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சென்றனர்.
சந்தேகம்
மதுரைக்கு வந்த பிறகு அந்த குழந்தை கடந்த 20-ந் தேதி இறந்து விட்டதாக கூறப்படுகிறது. குழந்தை என்பதால் உடலை வீட்டின் அருகே புதைத்துள்ளனர். மறுநாள் காலை புதைக்கப்பட்ட இடத்தில் பால் ஊற்றி இறுதி சடங்கு செய்வதை பார்த்த அந்த பகுதி மக்கள் சந்தேகம் அடைந்து போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில் பிரேத பரிசோதனை முடிந்து குழந்தையின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. அவர்கள் முறைப்படி நேற்று மதியம் குழந்தையின் உடலை அடக்கம் செய்ததாக கூறப்படுகிறது. புதைக்கப்பட்ட குழந்தையின் உடலை தோண்டி எடுத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.