< Back
மாநில செய்திகள்
நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

நடத்தையில் சந்தேகம்: மனைவியை கட்டையால் அடித்து கொன்ற ஓட்டல் ஊழியர்

தினத்தந்தி
|
8 Nov 2022 5:40 PM IST

மதுராந்தகம் அருகே நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தால் காதல் மனைவியை அடித்துக் கொலை செய்துவிட்டு மின்சாரம் தாக்கி இறந்ததாக நாடகமாடிய ஓட்டல் ஊழியர் கைது செய்யப்பட்டார்.

மின்சாரம் தாக்கியதாக...

செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே கழனிபாக்கம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 27). இவர் மதுராந்தகத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் மேற்பார்வையாளராக பணியாற்று வருகிறார். இவரது மனைவி சுதாமதி (25.) இவர் நாகப்பட்டினத்தை சேர்ந்தவர். இவர்கள் இருவரும் மறைமலை நகரில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை செய்த போது, இருவரும் காதலித்து 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கணவன், மனைவி இருவரும் மதுராந்தகம் அடுத்த கழனிபாக்கத்தில் குடும்பம் நடத்தி வந்தனர்.

இவர்களுக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், 5-ந் தேதி துணிகளை அயர்ன் செய்து கொண்டிருந்தபோது, மனைவி சுதாமதி மின்சாரம் தாக்கி இறந்து விட்டதாக அக்கம்பக்கத்தினரிடம் தெரிவித்த ரஞ்சித்குமார் உடலை அடக்கம் செய்வதற்காக அவசர, அவசரமாக இறுதிச்சடங்கு செய்ய ஏற்பாடு செய்தார்.

பிரேத பரிசோதனை

இதனால் சுதாமதி இறப்பில் ரஞ்சித் குமார் மீது சந்தேகம் உள்ளதாக என வருவாய்த் துறையினரையினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அதன்பின்னர், மதுராந்தகம் துணை போலீஸ் சூப்பிரண்டு துரைப்பாண்டியன், மதுராந்தகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தர்மலிங்கம் மற்றும் மதுராந்தகம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து சுதாமதியின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அப்போது, மருத்துவரின் முதல் கட்ட ஆய்வறிக்கையில், தலையில் பலமாக தாக்கப்பட்டதற்கான காயம் உள்ளதாகவும், அதன் காரணமாக சுதாமதி இறந்திருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளனர். இதனை அடுத்து சுதாமதியின் அண்ணன் சதீஷ்குமார் மதுராந்தகம் போலீசில் அளித்த புகாரின் அடிப்படையில், ரஞ்சித்குமாரிடம் விசாரணை மேற்கொண்டனர்.

தலையில் தாக்கினார்

இதில் போலீசார் முதற்கட்ட விசாரணையில், கடந்த 5-ந் தேதி அதிகாலையில் சுதாமதி செல்போனில் யாருடனோ பேசியிருந்ததை கண்டு சந்தேகமடைந்த ரஞ்சித் குமார் கட்டையால் சுதாமதியை தலையில் தாக்கியதும், அவர் மயக்கம் அடைந்த நிலையில், கழுத்தில் அயர்ன்பாக்ஸ் வயரை கொண்டு கழுத்தில் இறுக்கி கொலை செய்ததும் விசாரணையில் தெரியவந்தது.

பின்னர், அயர்ன் செய்த போது மின்சாரம் தாக்கி சுதாமதி இறந்ததாகவும் உறவினிடம் கூறி நம்பவைத்துள்ளார். அதைத்தொடர்ந்து கொலையை போலீசாருக்கு தெரியாமல் மறைப்பதற்காக அவசர அவசரமாக உடலை புதைக்க இறுதி சடங்கிற்கு ஏற்பாடு செய்ததாகவும் அவர் வாக்குமூலத்தில் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர்.

கைது

அதன்பின்னர், மனைவியை கட்டையால் அடித்துக் கொண்டு நாடகம் ஆடிய ரஞ்சித்குமார் மீது கொலை வழக்கு பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து மதுராந்தகம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்திய பின்னர், செங்கல்பட்டு கிளை சிறையில் அடைத்தனர். மேலும் இருவருக்கும் திருமணம் ஆகி 5 ஆண்டுகளே ஆவதால் கொலை சம்ப்வம் தொடர்பாக மதுராந்தகம் ஆர்.டி.ஓ. விசாரணை நடத்துவார் என போலீசார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்