< Back
மாநில செய்திகள்
வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணை நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு
மாநில செய்திகள்

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணை நிறுத்திவைப்பு - ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவு

தினத்தந்தி
|
29 Sep 2023 12:10 PM GMT

வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்து ஐகோர்ட்டு மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை,

தூத்துக்குடி மாவட்டம் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக்கோரி நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த பெர்டின் ராயன் மற்றும் சிதம்பரம் ஆகியோர் ஐகோர்ட்டு மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்திருந்தனர். இது தொடர்பாக அவர்கள் தாக்கல் செய்த மனுவில், சுங்கச்சாவடி அமைந்துள்ள பகுதியில் சாலை வசதி சரியில்லாததால் வாகைக்குளம் சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த மனு நீதிபதி எஸ்.எஸ்.சுந்தர், நீதிபதி பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, சுங்கக்கட்டணத்தில் 50% மட்டுமே வசூலிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த உத்தரவை சுங்கச்சாவடி நிர்வாகத்தினர் செயல்படுத்தாததால், அவர்கள் மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மீண்டும் மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இந்த நிலையில் இது தொடர்பான வழக்கு விசாரணை இன்று நடைபெற்றபோது, வாகைக்குளம் சுங்கச்சாவடியில் 50% கட்டணம் வசூலிக்க பிறப்பித்த ஆணையை நிறுத்திவைத்து, இந்த வழக்கின் விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவிட்டது.

மேலும் செய்திகள்