சேலம்
மாணவர்களுக்கு பாடம் எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம்
|மாணவர்களுக்கு பாடம் எடுக்காத அரசு பள்ளி ஆசிரியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
சேலம் அருகே எருமாபாளையத்தில் அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் கணித பட்டதாரி ஆசிரியராக செந்தில்குமார் பணிபுரிந்து வருகிறார். இவர் 7 முதல் 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வந்தார். ஆனால் அவர் சரியாக பாடம் நடத்தாமல் மெத்தனமாக இருந்து வருவதாக மாணவர்கள் தலைமை ஆசிரியரிடம் புகார் செய்தனர். இதையடுத்து அவரிடம் கடந்த வாரம் தலைமை ஆசிரியர் விளக்கம் கேட்டார். அப்போது அவர்களுக்கு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. மேலும் வெளியாட்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியருக்கு கணித ஆசிரியர் செந்தில்குமார் மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன், சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து கணித ஆசிரியர் செந்தில்குமார் மீது கூறப்பட்ட புகார் உறுதி செய்யப்பட்டதால் அவரை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் முருகன் உத்தரவிட்டார்.