சேலம்
அஸ்தம்பட்டி பணிமனை என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம்
|அரசு பஸ் பராமரிப்பில் அலட்சியமாக இருந்த சேலம் அஸ்தம்பட்டி பணிமனை உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
அரசு பஸ் பராமரிப்பில் அலட்சியமாக இருந்த சேலம் அஸ்தம்பட்டி பணிமனை உதவி என்ஜினீயர் உள்பட 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
பஸ் பராமரிப்பு
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் சேலம் கோட்டத்தில் 1,900-க்கும் மேற்பட்ட பஸ்கள் சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்களில் ஏற்படும் குறைபாடுகள் தெரிவிக்க அந்தந்த பணிமனைகளில் பஸ் பராமரிப்பு புத்தகங்கள் (லாக் புக்) உள்ளன.
அதன்படி, கடந்த சில நாட்களுக்கு முன்பு சேலம் அஸ்தம்பட்டி பணிமனையை சேர்ந்த சேலத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பஸ்சின் பிரேக் மற்றும் முகப்பு விளக்கு குறைபாடுகள் குறித்து அதன் டிரைவர் அந்த பராமரிப்பு புத்தகத்தில் குறிப்பிட்டிருந்தார். ஆனால் இந்த பதிவினை சிலர் தங்களது செல்போனில் புகைப்படம் எடுத்து அதனை வாட்ஸ்அப்பில் பதிவு செய்ததாக கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட்டது.
பணி இடைநீக்கம்
அதில், சம்பந்தப்பட்ட டிரைவர் தெரிவித்த குறைபாட்டை அங்கிருந்த தொழில்நுட்ப உதவியாளர் சரி செய்யாமல் அலட்சியமாக இருந்ததும், அதேசமயம், சரி செய்ததாக பணிமனை மேற்பார்வையாளரான உதவி பொறியாளர் மணி பொய்யான குறிப்பு எழுதியதும் தெரியவந்தது.
இதையடுத்து சம்பந்தப்பட்ட அவர்கள் இருவரையும் பணி இடைநீக்கம் செய்து சேலம் கோட்ட மேலாண் இயக்குனர் பொன்முடி உத்தரவிட்டுள்ளார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக உரிய விளக்கம் அளிக்க கிளையின் மேலாளர் ஆசைலிங்கத்திற்கு நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது.