திருவண்ணாமலை
மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளர் பணியிடை நீக்கம்
|மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
தண்டராம்பட்டு,
மாணவர்களுக்கு முறையாக முட்டை வழங்காத சத்துணவு அமைப்பாளரை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.
முன்மாதிரி அரசு பள்ளி
தண்டராம்பட்டில் முன்மாதிரி அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது. பாதுகாக்கப்பட்ட குடிநீர், கழிப்பிட வசதி, வகுப்பறை, டிஜிட்டல் வகுப்புகள் என நவீன வசதிகளுடன் செயல்படும் இந்த பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை பாடங்கள் நடத்தப்படுகிறது.
இந்த பள்ளியில் 547 மாணவ-மாணவிகள் படித்து வருகிறார்கள்.
இந்த பள்ளியில் சத்துணவு அமைப்பாளராக தேவேந்திரன் (வயது 51) என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் மாணவர்களுக்கு முறையாக முட்டைகள் வழங்கப்படுவது இல்லை என்று புகார்கள் வந்தன.
திடீர் ஆய்வு
இதுகுறித்து சில நாட்களுக்கு முன்பு மாவட்ட கல்வி அலுவலர் கார்த்திகேயன் மற்றும் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது வீட்டில் இருந்து உணவு எடுத்து வரும் மாணவர்களுக்கு முட்டை வழங்குவதில்லை என்றும் பள்ளியில் உணவு வாங்கும் மாணவர்களுக்கு மட்டுமே முட்டை வழங்கப்படுவதாகவும் புகார் தெரிவித்தனர்.
மேலும் பதிவேட்டில் அனைத்து மாணவர்களுக்கும் முட்டை வழங்கப்பட்டது போல கணக்கு காட்டி முறைகேடாக முட்டைகள் வெளியில் விற்பனை செய்ததும் தெரியவந்தது
பணியிடை நீக்கம்
இதையடுத்து அதிகாரிகள் கலெக்டருக்கு விசாரணையின் அறிக்கையை தாக்கல் செய்தனர். அதன் அடிப்படையில் சத்துணவு அமைப்பாளர் தேவேந்திரனை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் முருகேஷ் உத்தரவிட்டார்.