மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை - டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு
|டாஸ்மாக் மதுபான கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 அல்லது அதற்கு மேல் வசூலித்தால் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னை,
டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்கள் ரூ.10 கூடுதலாக விற்கப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்தது. இதனையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக டாஸ்மாக் மாவட்ட மேலாளர்களுக்கு மேலாண் இயக்குநர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அதில், தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் - மதுபான சில்லறை விற்பனைக் கடை மேற்பார்வையாளர்கள் / விற்பனையாளர்கள் / உதவி விற்பனையாளர்கள் கடமை தவறி பற்றின்றி செயல்பட்டு மதுபானங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட அதிகபட்ச விற்பனை விலையை விட (MRP) கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது - கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கு மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10/- மற்றும் அதற்கு மேல் விலை வைத்து மதுபானங்களை விற்பனை செய்கின்ற கடைப் பணியாளர்களின் மீது துறைரீதியான நடவடிக்கை மேற்கொண்டு தற்காலிக பணியிடை நீக்கம் செய்திட அறிவுறுத்தப்பட்டுள்ளது.