< Back
மாநில செய்திகள்
சக ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டபள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்
கிருஷ்ணகிரி
மாநில செய்திகள்

சக ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்டபள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம்

தினத்தந்தி
|
8 April 2023 12:30 AM IST

சக ஆசிரியர்களுடன் தகராறில் ஈடுபட்ட பள்ளி தலைமை ஆசிரியர் பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டார்.

பள்ளி தலைமை ஆசிரியர்

கிருஷ்ணகிரி மாவட்டம் பர்கூரை அடுத்த அத்திமரத்துபள்ளத்தை சேர்ந்தவர் கவுதம் (வயது 17). இவர் சிகரலப்பள்ளி அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். இந்த நிலையில் கவுதம் பள்ளி ஆசிரியர்களை தகாத வார்த்தைகளால் திட்டியதாக அவரது பெற்றோருக்கு தகவல் சென்றது.

இதையடுத்து பள்ளி தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார், மாணவரின் பெற்றோரை அழைத்து மாணவனுக்கு அறிவுரை கூறி அனுப்பினார். இந்த நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் கவுதம் தற்கொலை செய்து கொண்டார்.

மருத்துவ விடுப்பு

மாணவரின் தற்கொலைக்கு பள்ளி தலைமை ஆசிரியர் காரணம் என கவுதமின் உறவினர்கள் புகார் தெரிவித்தனர். இதனால் தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாருக்கு மருத்துவ விடுப்பு அளிக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமார், பள்ளி ஆசிரியர்களிடம் நான் தான் தலைமை ஆசிரியர். அதை மறந்து விட்டீர்களா என கூறி தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் வகுப்பில் இருந்த மேசை, ஜன்னல், கண்ணாடிகளையும் உடைத்ததாக தெரிகிறது.

பணியிடை நீக்கம்

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளியில் ஒழுங்கீனமான முறையில் நடந்து கொண்ட தலைமை ஆசிரியர் எட்வர்ட் ராஜ்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்