தர்மபுரி
மாரண்டஅள்ளி அருகே அரசு பள்ளி வகுப்பறையில்பொருட்களை உடைத்து சேதப்படுத்திய 5 மாணவ, மாணவிகள் இடைநீக்கம்
|மாரண்டஅள்ளி அருகே அரசு பள்ளி வகுப்பறையில் மேஜை, மின்விசிறி உள்ளிட்ட பொருட்களை உடைத்து சேதப்படுத்தியது தொடர்பாக 5 மாணவ, மாணவிகள் இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
மேைஜகள் உடைப்பு
தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அருகே அ.மல்லாபுரத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பிளஸ்-1, பிளஸ்-2 செய்முறை தேர்வுகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறைவடைந்தன.
இதையொட்டி, பள்ளியில் உள்ள ஒரு வகுப்பறையில் மேஜைகள், நாற்காலிகள், சுவிட்ச் பாக்ஸ் மற்றும் மின்விசிறிகள் உள்ளிட்ட பொருட்களை சில மாணவ, மாணவிகள் அடித்து உடைத்து சேதப்படுத்தினர்.
அதிகாரிகள் விசாரணை
இந்த நிலையில், பள்ளி வகுப்பறையில் பொருட்களை மாணவ, மாணவிகள் உடைத்து சேதப்படுத்தும் காட்சிகள் நேற்று முன்தினம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.
இதையடுத்து இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் உத்தரவுப்படி கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் அங்கு பணிபுரியும் ஆசிரியர்களிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இடைநீக்கம்
இதைத்தொடர்ந்து, சம்பவத்தில் தொடர்புடைய 3 மாணவர்கள், 2 மாணவிகளை 5 நாட்கள் இடைநீக்கம்(சஸ்பெண்டு) செய்து உத்தரவிடப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மேற்பார்வையில் கல்வித்துறை அதிகாரிகள் தொடர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.