தர்மபுரி
மதுக்கடையில் விதியை மீறி கூடுதலாக மதுபாட்டில்கள் விற்றமேற்பார்வையாளர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம்
|தர்மபுரி:
தர்மபுரியில் மதுக்கடையில் விதியை மீறி கூடுதலாக மதுபாட்டில்கள் விற்ற மேற்பார்வையாளர்கள் உள்பட 7 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
மதுபாட்டில்கள் பறிமுதல்
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை பகுதியில் மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது தொடர்பாக போலீசார் சோதனை நடத்தினார்கள். அப்போது மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்த ரவி என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து 70 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இந்த மதுபாட்டில்கள் எங்கிருந்து வாங்கப்பட்டன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அதியமான்கோட்டை பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் இருந்து மதுபாட்டில்களை வாங்கியது தெரியவந்தது. இதுதொடர்பாக மாவட்ட டாஸ்மாக் மேலாளர் மகேஸ்வரி சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையில் விசாரணை நடத்தினார்.
பணியிடை நீக்கம்
அப்போது அங்கு தனி நபர்களுக்கு விதிமுறையை மீறி கூடுதலாக மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரிய வந்தது. இது தொடர்பாக அங்கு பணி புரிந்த 2 மேற்பார்வையாளர்கள் மற்றும் 5 விற்பனையாளர்களை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்து மாவட்ட டாஸ்மாக் மேலாளர் உத்தரவிட்டார்.