நாமக்கல்
ஜேடர்பாளையம் பகுதியில், பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு எதிரொலி:சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணி இடைநீக்கம்
|பரமத்திவேலூர்:
ஜேடர்பாளையம் பகுதியில் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் எதிரொலியாக சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 3 போலீசார் பணி இடைநீக்கம் செய்யப்பட்டனர்.
தொடர் குற்ற செயல்கள்
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் பகுதியில் கடந்த 4 மாதங்களாக தொடர்ந்து வீடுகள், வெல்ல ஆலையில் டிராக்டர்களுக்கு தீ வைப்பு மற்றும் வெல்ல ஆலையில் தங்கியிருந்த குடியிருப்பில் மண்எண்ணெய் பாட்டில் வீச்சு என தொடர் குற்ற செயல்கள் நடந்து வருகிறது.
இதனால் ஜேடர்பாளையம் பகுதியில் தொடர் சமூகவிரோத செயல்களில் ஈடுபடும் மர்ம நபர்களை பிடிக்க அப்பகுதியில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பாக்கு மரங்கள் வெட்டி சாய்ப்பு
மேலும் கோவை மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையில் சேலம் சரக டி.ஐ.ஜி ராஜேஸ்வரி மற்றும் நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் குற்ற சம்பவங்களில் ஈடுபட்டு வருபவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் அப்பகுதியில் தொடர் குற்ற சம்பவங்கள் நடப்பது தொடர் கதையாகி வருகிறது.
இந்த நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு ஜேடர்பாளையம் அருகே சின்னமருதூர் பகுதியில் சவுந்தர்ராஜன் என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் இருந்த 1,600-க்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்தனர். இதனால் அப்பகுதியில் இரவு, பகலாக போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தனர்.
பணி இடைநீக்கம்
எனினும், கடந்த 8-ந் தேதி நள்ளிரவு அதே தோட்டத்தில் மீதம் இருந்த 1,000-த்திற்கும் மேற்பட்ட பாக்கு மரங்களை மர்ம நபர்கள் வெட்டி சாய்த்து விட்டு தப்பி சென்றனர். அப்பகுதியில் நடைபெறும் தொடர் குற்ற செயல்களை தடுப்பது, மர்ம நபர்களை பிடிப்பது போலீசாருக்கு பெரும் சவாலாகவே இருந்து வருகிறது. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டாலும் மீண்டும் அதே பகுதியில் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தி உள்ளது.
இந்த நிலையில் பாக்கு மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்ட தினத்தன்று இரவு பாதுகாப்பு பணியில் அலட்சியமாக செயல்பட்டதாக வெவ்வேறு மாவட்டங்களை சேர்ந்த போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி, போலீஸ்காரர்கள் ராமராஜ், ஜனார்த்தனன் ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்ய ேசலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.
இதையடுத்து அந்தந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் 3 போலீசாரையும் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டனர். இந்த சம்பவம் போலீசார் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.