சென்னை
மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம்: 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்ற தொழிலாளி
|சோழிங்கநல்லூரில் மருமகனுடன் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகம் அடைந்த தொழிலாளி 2-வது மனைவியின் கழுத்தை அறுத்து கொன்றார். தடுக்க வந்த மகளுக்கு கத்தி வெட்டு விழுந்தது.
சோழிங்கநல்லூர் காந்திநகர் ஏரிக்கரை பகுதியில் வசித்து வருபவர் முத்து (வயது 55). கூலித்தெழிலாளி. இவருடைய மனைவிகள் சரசு, புண்ணியவதி (46). இவர்களில் சரசுவுக்கு மைக்கேல் என்ற மகன் உள்ளார். புண்ணியவதி சென்னை மாநகராட்சியில் தனியார் நிறுவனம் மூலம் தூய்மை பணி செய்து வந்தார். புண்ணியவதிக்கு ரமேஷ், ரஞ்சிதம் என்ற மகன்களும் லட்சுமி, சந்திரா என்ற மகள்களும் உள்ளனர்.
லட்சுமியின் கணவர் ஜெயராஜ்க்கும் புண்ணியவதிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக சந்தேகத்தின் பேரில் அடிக்கடி கணவன்-மனைவி இருவரும் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்த மனைவியிடம் வழக்கம்போல் முத்து சந்தேகத்தின் பேரில் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஒரு கட்டத்தில் ஆத்திரம் அடைந்த முத்து, புண்ணியவதியை கத்தியால் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்தார்.
தாயின் கழுத்தை தந்தை அறுப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த மகள் சந்திரா அதை தடுக்க முயன்றார். இதில் அவரது கையில் வெட்டு விழுந்தது.
இதையடுத்து அவர் சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து முத்து தப்பிச்சென்று விட்டார். இது குறித்து தகவல் அறிந்த செம்மஞ்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று புண்ணியவதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தலைமறைவாக இருந்த முத்துவை செம்மஞ்சேரி போலீசார் கைது செய்தனர்.