தேனி
விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயர் கைது
|கடமலைக்குண்டு அருகே விவசாயியிடம் ரூ.14 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சர்வேயரை போலீசார் கைது செய்தனர். அவருடைய உதவியாளரும் சிக்கினார்.
நிலம் உட்பிரிவுக்கு விண்ணப்பம்
தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தாலுகா குமணன்தொழு கிராமத்தை சேர்ந்தவர் ராமேந்திரன் (வயது 35). விவசாயி. இவருக்கு சொந்தமான 5 ஏக்கர் பூர்வீக நிலத்தில் 1.47 ஏக்கர் நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக வருவாய்துறை இணையதளத்தில் விண்ணப்பித்தார். 3 முறை தொடர்ந்து விண்ணப்பித்தும் பல்வேறு காரணங்களினால் அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு ராமேந்திரன் மயிலாடும்பாறை நிலஅளவீடு அலுவலகத்தில் குறுவட்ட அளவர் பணியில் உள்ள சர்வேயர் செல்வரங்கன் (45) என்பவரிடம் சென்று தனது நிலத்தை உட்பிரிவு செய்து தரும்படி கோரிக்கை விடுத்தார்.
ரூ.14 ஆயிரம் லஞ்சம்
அதற்கு ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தரும்படி அவர் கேட்டதாக கூறப்படுகிறது. அதற்கு விவசாய வேலை செய்து வருகிறேன். அதனால் அவ்வளவு பணம் கொடுக்க முடியாது என்று ராமேந்திரன் கூறியுள்ளார். இதையடுத்து இறுதியாக ரூ.14 ஆயிரம் கொடுத்தால் நிலத்தை அளவீடு செய்து உட்பிரிவு செய்து தருவதாக சர்வேயர் செல்வரங்கன் திட்டவட்டமாக கூறினார்.
தனது சொந்த நிலத்தை உட்பிரிவு செய்ய லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமேந்திரன், இதுகுறித்து தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் கொடுத்தார். இதையடுத்து சர்வேயரை 'பொறி' வைத்து பிடிக்க போலீசார் முடிவு செய்தனர். இதற்காக ரூ.14 ஆயிரத்துக்கு ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை ராமேந்திரனிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் கொடுத்து அனுப்பினர். அவர் மயிலாடும்பாறை அலுவலகத்துக்கு நேற்று காலையில் சென்றார். அலுவலகத்துக்கு வெளியே நின்று செல்வரங்கனை செல்போனில் தொடர்பு கொண்டு ராமேந்திரன் பேசினார். அப்போது அவர் தனது உதவியாளர் வீரபாண்டியை (33) அலுவலகத்துக்கு வெளியே அனுப்பி வைப்பதாகவும், அவரிடம் கொடுக்கும்படி கூறினார்.
சர்வேயர் கைது
அதன்படி அலுவலக உதவியாளரிடம் லஞ்ச பணத்தை ராமேந்திரன் கொடுத்தார். உதவியாளர் அதை வாங்கிக்கொண்டு அலுவலகத்துக்குள் சென்றார். இதை மறைந்து இருந்த பார்த்து கொண்டிருந்த தேனி லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸ் துணை சூப்பிரண்டு சுந்தரராஜன், இன்ஸ்பெக்டர் ஜெயப்பிரியா மற்றும் போலீசார் உடனே அலுவலகத்துக்குள் சென்றனர். அங்கு உதவியாளர் லஞ்ச பணத்தை செல்வரங்கனிடம் கொடுக்கும்போது கையும்களவுமாக பிடித்தனர்.
அதன்பின்னர் செல்வரங்கன் மற்றும் அவரது உதவியாளர் வீரபாண்டி இருவரிடமும் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், செல்வரங்கன் லஞ்சம் வாங்கியதை ஒப்புக்கொண்டார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து சர்வேயர் செல்வரங்கன், உதவியாளர் வீரபாண்டி ஆகியோரை கைது செய்தனர். விவசாய நிலத்தை உட்பிரிவு செய்வதற்காக சர்வேயர் லஞ்சம் வாங்கிய சம்பவம் மயிலாடும் பாறை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.