டெல்டாவில் மழையினால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு - அமைச்சர் விளக்கம்
|மழையினால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டெல்டா மாவட்டங்களில் மழையினால் சேதமான பயிர்கள் கணக்கெடுப்பு தொடர்பான குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்றும் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "03.10.2022 அன்று தமிழக எதிர்க்கட்சி தலைவர் டெல்டா மாவட்டங்களில் மழையினால் மூழ்கி சேதமடைந்த குறுவை பயிர்களுக்கான கணக்கெடுப்பை உடனடியாக நடத்தி பாதிப்படைந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டை உடனடியாக வழங்க வேண்டுமென தெரிவித்துப் பல ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் எல்லா துறைகளிலும் தமிழகம் முன்னோடி மாநிலமாக திகழ்வதைப் பொறுத்துக் கொள்ள முடியாத போலி விவசாயி எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஒரு வெற்று அறிக்கையினை வெளியிட்டு குழப்பத்தை விளைவிக்கும் நோக்கத்துடன் வெற்று விளம்பரத்தை அரங்கேற்றியுள்ளார். முதற்கட்டமாக அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள 1 இலட்சம் ஏக்கர் பாதிக்கப்பட்டுள்ளது என்பதே தவறானது. இத்துறையின் முதற்கட்ட கணக்கெடுப்பில் 17,775 ஏக்கர் நீரில் மூழ்கியுள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் எப்பொழுதுமே ஆதாரமின்றி பொத்தாம் பொதுவாக குற்றச்சாட்டுகள் வைப்பதிலேயே வாடிக்கையாக கொண்டுள்ளார். மீண்டும் மீண்டும் நெல் கொள்முதல் நிலையங்கள் பற்றிய அடிப்படை புரிதல் ஏதும் இல்லாமல் அறிக்கை விடுகிறார். நிரந்தரக் கட்டடம் கொண்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தான் நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்கள் என்று கூறுவர். ஆனாலும் அவையும் தற்காலிகமாகக் கொள்முதல் செய்பவை தான். நெல் கொள்முதலைக் குறைத்திட வேண்டும் என்று அரசு கூறுவதாக வடிக்கட்டிய பொய்யைக் கூறியுள்ளார்.
1.9.2022 முதல் நேற்று வரை 902 கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு 3.35 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் டெல்டா மாவட்டங்களில் மட்டும் 670 நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக, 2.47 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 753 கொள்முதல் நிலையங்கள் மூலம் தமிழகம் முழுவதும் 3.22 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டெல்டா மாவட்டங்களில் 531 கொள்முதல் நிலையங்கள் மூலம் 2.07 இலட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட புள்ளி விவரங்களைப் பார்த்தாலே நெல் கொள்முதல் தொடர்பாக எந்த விவரத்தையும் புரிந்து கொள்ளாமலும், அறிந்து கொள்ளாமலும் வேண்டுமென்றே இவ்வரசின் மீது களங்கம் கற்பிக்க எதிர்க்கட்சித் தலைவர் தவறான அறிக்கையை விடுகிறார் என்பது தெளிவாகும்.
விவசாயிகளுக்கு நெல் கொள்முதல் பட்டியல் பெறப்பட்டவுடன் அதற்கான தொகை அவர்கள் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை இந்த பருவத்திற்கு ரூ. 420.05 கோடி வழங்கப்பட்டுள்ளது.
நிரந்தர என்பதை 'நிரந்த' என்றும் கொள்முதலைக் 'கொல்முதல்' என்றும் அலைக்கழிப்பு என்பதை 'அழைகளிப்பு' என்றும் குறிப்பிடுவதிலிருந்தே எவ்வளவு 'ஆழ்ந்து' அறிக்கை விடுகிறார் என்பதை பொதுமக்கள் புரிந்து கொள்வார்கள்.தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழையினால் பாதிப்பு ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணர்ந்த விவசாயிகளுக்கான இவ்வரசு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஏற்கனவே 26.09.2022 அன்று நடந்த ஆய்வின்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது குறித்து அரசு அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்கள்.
அதனை தொடர்ந்து 27.09.2022 அன்று நானும் விரிவான அறிவுரைகளை வேளாண்துறை உயர் அலுவலர்களுக்கு வழங்கியதோடு நிலவரங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறேன். மேலும் வடகிழக்கு பருவமழை தொடர்பான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை கண்காணிக்க 5,000 வேளாண் அலுவலர்கள் மாநிலம் முழுவதும் நியமிக்கப்பட்டள்ளனர்.
விதை, உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் போதுமான அளவு இருப்பில் உள்ளன. விதைகளைப் பொறுத்தவரை, நெல், சிறுதானியம், பயறு வகைகள், எண்ணெய் வித்து பயிர்கள் மற்றும் பருத்தி விதைகள் 53,182 மெட்ரிக் டன் இருப்பில் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதல்-அமைச்சர் அவர்களின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் உரம் அனைத்து விவசாயிகளுக்கும் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி யூரியா90,947 மெ.டன், டி.ஏ.பி. - 55,628 மெ.டன், பொட்டாஷ் - 33,876 மெ.டன்., காம்பிளக்ஸ் - 1,61,626 மெ.டன். இருப்பில் உள்ளன. விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை நீக்குவதற்காக மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுரையின்படி வேளாண்மை இயக்குநர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டது. இதன்படி உரம் தொடர்பான புகார்கள் 9363440360 என்ற செல்போன் எண்ணிலும் வாட்ஸ்அ ப்பிலும் புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் விவசாயிகளின் உரத்தேவை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. எனவே, போதுமான அளவு உரம் கையிருப்பு உள்ளதாலும், சீரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாலும் விவசாயிகள் உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய சூழல் ஏதுமில்லை
சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேளையில் கூட்டுறவு வேளாண் கடன்கள் வழங்கப்படவில்லை என்று உண்மைக்குப் புறம்பான தகவலை வெளியிட்டுள்ளார். கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் இந்த ஆண்டில் மட்டுமே 6,04,060 விவசாயிகளுக்கு ரூ.4,566.13 கோடி அளவுக்கு கடன்கள் வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூ.603.50 கோடி அளவிற்கு 87,768 விவசாயிகளுக்கு பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இதே காலகட்டத்தில் எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆட்சியில் 4,87,640 விவசாயிகளுக்கு 3814.19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளது; டெல்டா மாவட்டங்களில் 63,398 விவசாயிகளுக்கு 427.05 கோடி ரூபாய் பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது" என்று அதில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.