தஞ்சாவூர்
அந்தரத்தில் தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்; மீண்டும் அடையாளம் காட்டுமா?
|அந்தரத்தில் தொங்கும் கண்காணிப்பு கேமராக்கள்; மீண்டும் அடையாளம் காட்டுமா?
தஞ்சை வடக்குவாசல் நால்ரோட்டில் வைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்கள் கம்பத்தில் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளிக்கிறது. இது மீண்டும் செயல்பாட்டுக்கு வந்து அடையாளம் காட்டுமா? என பொதுமக்கள் எதிர்பார்ப்புடன் உள்ளனர்.
கண்காணிப்பு கேமராக்கள்
தஞ்சை வடக்கு வாசல் பகுதியில் ராஜாகோரி சுடுகாடு உள்ளது. இந்த மாநகரில் இறப்பவர்களின் பெரும்பாலான உடல்கள் இங்கு எடுத்துச்செல்லப்பட்டு அடக்கம் மற்றும் தகனம் செய்யப்படுகிறது. மேலும் இந்த பகுதியில் கிறிஸ்தவ ஆலயங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. மேலும் இந்த பகுதியில் தான் மாட்டுச்சந்தையும் செயல்பட்டு வந்தது. இந்த பகுதியில் வசிப்பவர்கள் பெரும்பாலும் கூலி தொழிலாளர்கள் ஆவர்.
மேலும் இந்த பகுதியில் குற்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், யாராவது குற்றம் செய்தால் அவர்களை அடையாளம் காணும் வகையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு நால்ரோட்டில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமராக்கள் அந்த பகுதி பொதுமக்கள் ஏற்பாட்டில், மாநகாராட்சி மற்றும் போலீசார் ஒத்துழைப்புடன் பொருத்தப்பட்டது.
அந்தரத்தில் தொங்குகிறது
நான்கு முனைகளில் இருந்து வருபவர்களை அடையாளம் காணும் வகையில் நான்கு திசைகளை நோக்கி இந்த கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்தன. மேலும் இந்த கேமராக்களில் பதிவு செய்யப்படும் காட்சிகளை அருகில் உள்ள ஒரு அறையில் இருந்து பார்க்கும் வகையிலும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இந்த கேமராக்களை பொதுமக்களே ரூ.40 ஆயிரம் நிதி திரட்டி பொருத்தினர். இது போலீசாருக்கு பெரும் வரப்பிரசாதமாக இருந்தது.
சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்து வந்த இந்த கண்காணிப்பு கேமராக்கள் தற்போது பயன்பாட்டில் இல்லை. காரணம் கேமராக்கள் பொருத்தப்பட்டு இருந்த கம்பத்தில் தற்போது 4 கேமராக்கள் அந்தரத்தில் தொங்கியபடி காட்சி அளி்க்கிறது. இதனை யாரும் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் கேமராக்கள் பொருத்தப்பட்டதன் நோக்கமே நிறைவேற்றாமல் உள்ளது.
செயல்பாட்டுக்கு வருமா?
இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், தஞ்சை மாநகராட்சி பகுதியில் தற்போது ஆங்காங்கே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வருகின்றன. ஆனால் வடக்குவாசல் பகுதியில் 4 சாலைகள் சந்திக்கும் இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராக்கள் பயன்பாடு இல்லாமல் அந்தரத்தில் தொங்கியபடி உள்ளது. இந்த கேமராக்களை சரி செய்து பொருத்தி, மாநகராட்சி பொருத்தும் கேமராக்கள் இணைப்புடன் இணைக்கலாம். எனவே பயன்பாடு இல்லாமல் இருக்கும் இந்த கண்காணிப்பு கேமராக்களை சரி செய்து பொருத்தி, குற்ற சம்பவம் நடைபெறுவதை தடுக்கும் வகையிலும், குற்ற செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணுவதற்கும் வசதியாக இருக்கும். இதற்கு அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.என்றனர்.