கன்னியாகுமரி
நாகர்கோவிலில் 396 வாகனங்கள் ஆய்வு:பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம்கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவு
|நாகர்கோவிலில் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
நாகர்கோவில்:
நாகர்கோவிலில் 396 பள்ளி வாகனங்கள் ஆய்வை கலெக்டர் ஸ்ரீதர் தொடங்கி வைத்தார். மேலும் பள்ளி வாகனங்களில் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும் என உத்தரவிட்டார்.
வாகனங்கள் ஆய்வு
தமிழகம் முழுவதும் பள்ளி வாகனங்கள் அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்குகிறதா? என ஆண்டுக்கு ஒரு முறை ஆய்வு நடத்தப்பட்டு வருகிறது.
அதன்படி குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு சொந்தமான வாகனங்கள் ஆய்வு நாகர்கோவில் கன்கார்டியா பள்ளி மைதானத்தில் நேற்று நடந்தது. கலெக்டா் ஸ்ரீதா் தலைமையில் வட்டார போக்குவரத்து அதிகாரி சசி, ஆய்வாளர்கள் எஸ்.சக்திவேல், கே.சக்திவேல் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர். முன்னதாக கலெக்டர் ஸ்ரீதர் பேசுகையில் கூறியதாவது:-
கண்காணிப்பு கேமரா கட்டாயம்
பள்ளி வாகனங்களில் தீயணைப்பு பெட்டி, அவசர கால வெளியேறும் வசதி உள்ளிட்ட 16 விதமான பொருட்கள் இருக்க வேண்டும். அது வாகனங்களில் உள்ளதா? என ஒவ்வொரு வாகனங்களாக ஆய்வு நடத்தப்படும். வாகன ஓட்டுனர்கள் பணியில் ஈடுபட்டு இருக்கும்போது செல்போன் பேசுவதை கட்டாயம் தவிர்க்க வேண்டும். ஒரு வினாடி கவன குறைவால் பெரும் விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது.
ஒவ்வொரு வாகனத்தின் முன்பும், பின்பும் கண்காணிப்பு கேமரா கட்டாயம் பொருத்த வேண்டும். ஆனால் நிறைய வாகனங்களில் கேமரா மற்றும் சென்சார் பொருத்தப்படாமல் உள்ளது. இதுபோன்ற விஷயங்கள் சரி செய்ய வேண்டும். பள்ளி வாகனத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டால் அதை தடுப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
முதலுதவி பெட்டி
மேலும் வாகனத்தில் குழந்தைகள் ஏறுவதற்கும், இறங்குவதற்கும் ஒரே வழி இடது புறத்தில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். படிகள் தரையில் இருந்து 300 மீட்டருக்கு மிகாமல் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். கதவுகள் உறுதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும். அவசர வழி வலது பக்கத்தில் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். மாணவ, மாணவிகள் புத்தகப் பைகளை வைப்பதற்கு தனியாக அடுக்கு பலகை இருக்க வேண்டும்.
முதலுதவி பெட்டி உரிய மருந்துகளுடன் பராமரிக்கப்பட வேண்டும். ஐ.எஸ்.ஐ. சான்று பெற்ற தீயணைப்பு கருவிகள் வாகனத்தின் உட்புறம் பொருத்தப்பட்டு இருக்க வேண்டும். பள்ளி வாகனத்தில் வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தப்பட்டு இருக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
புகார்கள்
இதைத் தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறுகையில், "குமரி மாவட்டத்தில் நாகர்கோவில் வட்டார போக்குவரத்து அலுவலகத்தின் கீழ் 78 பள்ளிகள் செயல்பட்டு வருகிறது. அதில் 396 வாகனங்கள் உள்ளன. இந்த வாகனங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பள்ளி வாகனங்களில் ஒரு சில குறைபாடுகள் இருக்கிறது. அதை உடனே நிவர்த்தி செய்ய அறிவுறுத்தி உள்ளோம். பள்ளிகள் திறப்பதற்கு முன்னதாக அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்ய வேண்டும். இந்த பணிகள் முடிந்ததும் மார்த்தாண்டத்தில் ஆய்வு பணி நடத்தப்படும். ஆட்டோக்களில் அதிக அளவு மாணவ, மாணவிகளை ஏற்றி செல்லக்கூடாது. தனியார் வாகனங்களில் மாணவர்களை ஏற்றி செல்வதாக புகார்கள் வந்துள்ளன. இதுதொடர்பாக ஆய்வு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்றார்.
முன்னதாக தீயணைப்பு வீரர்கள் சார்பில் தீத்தடுப்பு குறித்து பள்ளி வாகன ஓட்டுனர்கள் செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.