குற்றவாளிகள் வேறு கோர்ட்டில் சரணடைவது செல்லாது - சென்னை ஐகோர்ட்டு அதிரடி
|தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, எல்லைக்குட்பட்ட கோர்ட்டில் தான் சரணடைய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு கூறியுள்ளது.
சென்னை,
கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு கோர்ட்டில் சரணடைவது செல்லாது என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூரில் தி.மு.க. வடக்கு ஒன்றிய செயலாளராக இருந்தவர் ஆராமுதன். இவர் மீது மர்ம கும்பல் நாட்டு வெடி குண்டு வீசி சமீபத்தில் தாக்குதல் நடத்தியது. இதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த கொலை வழக்கில் காஞ்சிபுரம், திருப்பூரைச் சேர்ந்த 5 பேர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் கோர்ட்டில் சரணடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் முன்பு ஆஜரான அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னா, கொலை வழக்கில் தேடப்படும் குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட கோர்ட்டில் தான் சரணடைய வேண்டும். வேறொரு கோர்ட்டில் சரணடைய முடியாது.
மேலும், சத்தியமங்கலம் கோர்ட்டில் சரணடைந்ததை ஏற்றிருக்க கூடாது. இது போன்ற நடைமுறையை ஊக்குவித்திருக்க கூடாது. இதுபோல் சரணடைவதால் வழக்கு விசாரணை பாதிக்கும். உண்மையான குற்றவாளிகள் சரணடையாமல் போலியான நபர்களை சரணடைய வைப்பார்கள். எனவே, சத்தியமங்கலம் கோர்ட்டில் குற்றவாளிகள் சரணடைந்ததை ஏற்றுக்கொண்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி அது தொடர்பான மனுவையும் தாக்கல் செய்தார்.
இதனை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், அரசு தலைமை குற்றவியல் வக்கீல் அசன் முகமது ஜின்னாவின் முறையீட்டை ஏற்று கொண்டு, கொலை வழக்குகளில் தொடர்புடையவர்கள் வேறு கோர்ட்டில் சரணடைவது செல்லாது என்று அறிவித்தார்.
மேலும் அவர் பிறப்பித்த உத்தரவில், "தேடப்படும் குற்றவாளிகள் கொலை சம்பவம் நடந்த, எல்லைக்குட்பட்ட கோர்ட்டில்தான் சரணடைய வேண்டும், சம்பந்தப்பட்ட எல்லைக்கு உட்படாத மாஜிஸ்திரேட் முன்பு தாக்கல் செய்யப்படும் மனு விசாரணைக்கு உகந்தது அல்ல. ஒருவேளை சரணடைந்தால் குறிப்பிட்ட மாஜிஸ்திரேட் தனது எல்லைக்குட்பட்ட காவல் நிலையத்துக்கு தகவல் அளித்து சரணடையும் நபரை காவலில் எடுக்க உத்தரவிடலாம். இந்திய தண்டனைச் சட்ட பிரிவுகளின் கீழ் பதியப்படும் வழக்குகளுக்கு மட்டுமே இந்த உத்தரவு பொருந்தும் என்று தெரிவித்துள்ளார்.