திருவள்ளூர்
பூண்டி ஏரியில் உபரி நீர் திறப்பு: கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 பேர் மீட்பு
|கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 18 பேர் மீட்கப்பட்டனர்.
'மாண்டஸ்' புயல் காரணமாக பெய்த கனமழையால் பூண்டி ஏரி கிடுகிடுவென உயர்ந்தது. ஏரியின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக தண்ணீர் திறக்கப்பட்டு பின்னர் 7 ஆயிரம் கனஅடியாக குறைக்கப்பட்டது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
பெரியபாளையம் அருகே மஞ்சங்காரனை ஊராட்சியை சேர்ந்த கோட்டைக்குப்பம் கிராமம், ஈஸ்வரன் கோவில் பகுதியில் 60 பேர் வசித்து வந்தனர். இவர்களில் 42 பேர் நேற்றுமுன்தினம் இரவு பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்கு சென்று விட்டனர். 18 பேர் மட்டும் நேற்று கோட்டைக்குப்பம் பகுதியில் இருந்து வெளியேற முடியாமல் தவித்தனர்.
தகவல் அறிந்த பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் பேரிடர் மீட்பு படையினர் 10 பேர் கொண்ட குழுவினர் ரப்பர் படகு மூலம் அங்கு சென்றனர். பின்னர், அவர்களை பத்திரமாக படகு மூலம் மீட்டு கரைக்கு கொண்டு வந்தனர். அவர்கள் அனைவரும் மஞ்சங்காரணையில் உள்ள சமுதாய கூடத்தில் தங்க வைக்க வருவாய் ஆய்வாளர் சரவணன் தலைமையில் வருவாய்த்துறையினர் ஏற்பாடு செய்தனர். ஆனால், அவர்கள் அனைவரும் தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதாக கூறி விட்டு அங்கிருந்து சென்று விட்டனர்.