சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய தைலம் டப்பா அறுவை சிகிச்சையின்றி அகற்றம்
|திருவண்ணாமலை அருகே சிறுமியின் சுவாச குழாயில் சிக்கிய தைலம் டப்பாவை அறுவை சிகிச்சையின்றி அகற்றிய மருத்துவர்களை அனைவரும் பாராட்டினர்.
திருவண்ணாமலை:
சென்னை மேடவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சோபன்பாபு, தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான திருவண்ணாமலை மாவட்டம் சாத்தனூரில் உள்ள வீட்டிற்கு குடும்பத்துடன் வந்து உள்ளார். கடந்த 28-ந் தேதி இரவு அவரது 2 வயது மகள் ஹர்ஷினி சிறிய அளவிலான தைலம் டப்பாவை வைத்து கொண்டு விளையாடி கொண்டிருந்தார்.
அப்போது டப்பாவை வாயில் வைத்து விளையாடிய போது எதிர்பாராமல் விழுங்கியதில், டப்பா சிறுமியின் தொண்டையில் சிக்கி கொண்டது. இதையறிந்த அவரது குடும்பத்தினர் தைலம் டப்பாவை வெளியே எடுக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர். ஆனால் வெளியே எடுக்க முடியவில்லை.
பின்னர் தானிப்பாடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிறுமி ஹர்ஷினியை அழைத்து சென்றனர். இதற்கிடையில் சிறுமியின் உடல்நிலை மோசமடைந்தது. அவரது சுவாசம் மெல்ல மெல்ல குறைந்து உள்ளது. இதையடுத்து திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சிறுமியை அழைத்து வந்து உள்ளனர். அப்போது சிறுமி சுய நினைவு இல்லாமல் இருந்து உள்ளார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதை உணர்ந்த காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் கமலக்கண்ணன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் சிறுமியை அறுவை சிகிச்சை பிரிவுக்கு கொண்டு சென்று சிகிச்சையை தொடங்கினர்.
பின்னர் அறுவை சிகிச்சையின்றி சிறுமியின் சுவாச குழாயில் சிக்கியிருந்த தைலம் டப்பாவை எண்டோஸ்கோப்பி முறையில் வெளியே எடுத்தனர். மருத்துவர்களின் கண்காணிப்பில் இருந்த சிறுமி மெல்ல, மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பினார். இதற்கிடையில் சிறுமிக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. உயிருக்கு ஆபத்தான நிலையில் வந்த சிறுமிக்கு உரிய சிகிச்சை அளித்து பிழைக்க வைத்து மருத்துவர்களை அனைவரும் பாராட்டினர்.
மேலும் இது குறித்து மருத்துவர்கள் கூறுகையில்,
குழந்தைகளை பெற்றோர் பாதுகாப்பாக பராமரிக்க வேண்டும். சிறிய பொருட்கள், நாணயங்கள் உள்ளிட்டவற்றை விளையாட கொடுக்கக் கூடாது. அதனை குழந்தைகள் விழுங்கும் போது ஆபத்தாப முடிந்து விடும். மேலும் குழந்தையின் தொண்டையில் ஏதாவது பொருட்கள் சிக்கிக் கொண்டால் குழந்தையை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு வந்து சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காலம் தாழ்த்துவது உயிருக்கு ஆபத்தாக முடிந்து விடும் என்று கூறினர்.