< Back
மாநில செய்திகள்
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை
மாநில செய்திகள்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை தொடர்ந்து நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுதலை

தினத்தந்தி
|
13 Nov 2022 1:55 AM IST

சுப்ரீம் கோர்ட்டு விடுதலை தீர்ப்பையடுத்து ராஜீவ்காந்தி கொலை வழக்கில் 31 ஆண்டு காலம் சிறைவாசம் அனுபவித்த நளினி உள்பட 6 பேரும் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர். இதில் 4 பேர் திருச்சி சிறப்பு முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

ராஜீவ்காந்தி கொலை வழக்கு

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்துக்காக சென்னை அருகே உள்ள ஸ்ரீபெரும்புதூருக்கு வருகை தந்த போது மனித வெடிகுண்டு மூலம் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் மேலும் 15 பேர் உடல் சிதறி பலியாகினர்.

உலகையே உலுக்கிய இந்த கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரித்தது. 41 பேரை கைது செய்து விசாரணை நடத்தியது. விசாரணை காலகட்டத்தில் 15 பேர் மரணத்தை தழுவினர். 26 பேருக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பூந்தமல்லி சிறப்பு தடா கோர்ட்டில் நடந்த வழக்கு விசாரணையின் போது 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ஜெயக்குமார், ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் அது ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

7 பேரும் விடுதலை

31 ஆண்டு காலம் சிறைவாசத்தை அனுபவித்த இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக அரசு சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்காமல் போனதால் பேரறிவாளன் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு பேரறிவாளனை கடந்த மே மாதம் 18-ந்தேதி விடுதலை செய்து தீர்ப்பளித்தது. இந்த நிலையில் பேரறிவாளனை விடுதலை செய்தது போன்று தங்களையும் விடுவிக்க வேண்டும் என்று நளினியும், ரவிச்சந்திரனும் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு இந்த வழக்கில் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் அதிரடியாக விடுதலை செய்து நேற்று முன்தினம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.

சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல்

இந்த வழக்கில் நளினி, ரவிச்சந்திரன் ஆகிய 2 பேரும் பரோலில் இருந்தனர். ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேர் சென்னை புழல் சிறையிலும், சாந்தன், முருகன் ஆகிய 2 பேர் வேலூர் மத்திய சிறையிலும் அடைக்கப்பட்டிருந்தனர்.

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை அடுத்து அவர்கள் 6 பேரும் எந்த நேரத்திலும் விடுதலை செய்யப்படலாம் என்ற எதிர்ப்பார்ப்பு நிலவியது. சுப்ரீம் கோர்ட்டின் இந்த உத்தரவு நகலுக்காக தமிழக சிறைத்துறை அதிகாரிகளும் காத்திருந்தனர்.

இதுகுறித்து சிறைத்துறை இயக்குனர் டி.ஜி.பி. அமரேஷ் புஜாரியிடம் கேட்ட போது, 'சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு நகல் வந்தவுடன் சிறையில் இருந்து சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோர் உடனடியாக விடுதலை செய்யப்படுவார்கள்' என்று தெரிவித்தார்.

திருச்சி சிறப்பு முகாம்

நேற்று பிற்பகல் 3 மணியளவில் தமிழக சிறைத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவு நகல் கிடைத்தது. உடனடியாக சிறையில் இருந்து சாந்தன், முருகன், ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை விடுவிப்பதற்கான ஏற்பாடுகள் நடந்தது. சரியாக மாலை 5.05 மணிக்கு புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரும், வேலூர் சிறையில் இருந்து சாந்தன், முருகன் ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர்.

அவர்கள் 4 பேரும் உடனடியாக போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டனர். இவர்கள் 4 பேரும் இலங்கை நாட்டை சேர்ந்தவர்கள். இவர்களிடம் பாஸ்போர்ட், விசா போன்ற ஆவணங்கள் எதுவும் இல்லை. இதனால் இவர்கள் போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டதாக சிறைத்துறை அதிகாரிகள் கூறினார்கள்.

அவர்கள் 4 பேரும் பலத்த போலீஸ் பாதுகாப்போடு திருச்சியில் உள்ள சிறப்பு முகாமிற்கு அழைத்து செல்லப்பட்டனர்.

சொந்த நாட்டுக்கு...

இவர்கள் 4 பேரும் அவர்கள் சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். ஒருவேளை இவர்கள் இலங்கைக்கு செல்ல விரும்பவில்லை என்றால் வேறு எந்த நாட்டுக்கு செல்ல விரும்புகிறார்களோ, அந்த நாடும் அனுமதித்தால் அங்கு இவர்கள் அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று டி.ஜி.பி. அலுவலக உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ஆனால் இவர்கள் அகதிகளாக கருதப்பட மாட்டார்கள் என்றும் அந்த அதிகாரி கூறினார். நளினியும், ரவிச்சந்திரனும் தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் என்பதால் அவர்கள் திருச்சி சிறப்பு முகாமுக்கு அழைத்து செல்லப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பேரறிவாளன், அற்புதம்மாள் வருகை

புழல் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகியோரை வரவேற்பதற்காக பேரறிவாளன், அவரது தாயார் அற்புதம்மாள் ஆகியோர் வந்திருந்தனர்.

ஜெயக்குமாரும், ராபர்ட் பயாசும் மகிழ்ச்சியுடன் சிறையில் இருந்து வெளியே வந்தனர். போலீஸ் வேனில் இருந்தபடி கையசைத்தனர்.

புழல் சிறைக்கு வெளியே போலீசாருடன் நாம் தமிழர் கட்சியினர் வாக்குவாதம்

புழல் சிறையில் இருந்து ஜெயக்குமார், ராபர்ட் பயாஸ் ஆகிய 2 பேரும் நேற்று விடுதலை செய்யப்படும் தகவலை அறிந்து நாம் தமிழர் கட்சியினர் சிறை நுழைவுவாயிலில் திரண்டனர்.

அப்போது மேள-தாளம் இசைக்கப்பட்டது. இதற்கு அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து போலீசாருக்கும், நாம் தமிழர் கட்சியினருக்கும் இடையே வாக்குவாதம் நடைபெற்றது. இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்