டெண்டர் முறைகேடு வழக்கு: விசாரணை அறிகையை எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
|டெண்டர் முறைகேடு வழக்கின் முதல் கட்ட விசாரணை அறிக்கையை முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு வழங்க தமிழக அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
புதுடெல்லி,
கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சராக இருந்த எஸ்.பி. வேலுமணி தன்னுடைய சகோதரர்கள், உறவினர்களுக்கு டெண்டர்களை ஒதுக்கிய முறைகேடு வழக்கு தொடர்பாக விசாரணை சென்னை ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.
எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான இந்த ஊழல் வழக்கில் 10 வாரங்களில் விசாரணை நடத்தி இறுதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு லஞ்ச ஒழிப்புத் துறை இயக்ககத்திற்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்தும் தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரியும் காவல்துறை விசாரணையின் அறிக்கையை தனக்கு தரக்கோரியும் சுப்ரீம் கோர்ட்டில் எஸ்.பி.வேலுமணி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு விசாரணை தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு முன்பாக விசாரணை வந்தது. விசாரணையில், எஸ்.பி. வேலுமணி மீதான டெண்டர் முறைகேடு வழக்கில் வழக்கு விசாரணைக்குத் தடையில்லை என்றும் சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கின் விசாரணையைத் தொடரலாம் என்றும் கூறியுள்ளது.
மேலும், எஸ்.பி.வேலுமணி கேட்டதற்கு இணங்க, விசாரணை அறிக்கையின் நகலை அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. தொடர்ந்து ஆட்சியாளர்கள் மாறலாம், அரசு விசாரணை அமைப்புகள் நியாயமாக இருக்க வேண்டும் என நீதிபதி அறிவுறுத்தினார்.