< Back
மாநில செய்திகள்
துணை நடிகர் மாயி சுந்தர் மரணம்
திருவாரூர்
மாநில செய்திகள்

துணை நடிகர் மாயி சுந்தர் மரணம்

தினத்தந்தி
|
25 Dec 2022 12:15 AM IST

துணை நடிகர் மாயி சுந்தர் மரணம்

வெண்ணிலா கபடி குழு படத்தில் துணை நடிகராக நடித்த மாயி சுந்தர் உடல் நலக்குறைவால் மரணம் அடைந்தார். அவரது உடலுக்கு திரளான ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

துணை நடிகர்

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி கீழப்பாலம் பகுதியை சேர்ந்தவர் மாயி சுந்தர்(வயது 51). இவருக்கு ஒரு தம்பி மற்றும் ஒரு தங்கை உள்ளனர். 51 வயதான சுந்தர் திருமணம் செய்து கொள்ளாமல் தனது தாய், தந்தையுடன் மன்னார்குடியில் வசித்து வந்தார்.

இவர் மாயி, ரன், வெண்ணிலா கபடி குழு, மிளகாய், துள்ளாத மனமும் துள்ளும் உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட படங்களில் துணை நடிகராக நடித்துள்ளார். மாயி படத்தில் நடித்ததன் காரணமாக இவர் மாயி சுந்தர் என்று அழைக்கப்பட்டார்.

மஞ்சள் காமாலை நோய்

மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்ட மாயி சுந்தர் வீட்டில் இருந்தபடியே ஆஸ்பத்திரிக்கு அவ்வப்போது சென்று சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது உடல்நிலை மோசமானது. இதையடுத்து திருவாரூரில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அவரை சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

திரளான ரசிகர்கள் அஞ்சலி

மன்னார்குடி கீழப்பாலத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட மாயி சுந்தர் உடலுக்கு திரளான பொதுமக்கள், ரசிகர்கள் அஞ்சலி செலுத்தினர்.

நேற்று மாலை அவரது உடல் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு வடசேரி சாலையில் உள்ள எரிவாயு தகன மையத்தில் தகனம் செய்யப்பட்டது.

Related Tags :
மேலும் செய்திகள்