< Back
மாநில செய்திகள்
மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை - 3 பேர் கைது
மாநில செய்திகள்

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரை சப்ளை - 3 பேர் கைது

தினத்தந்தி
|
11 Dec 2022 6:29 AM GMT

மதுரையில் பள்ளி மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்த மருந்துக்கடை உரிமையாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மதுரை,

மதுரையில் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு சிலர் போதை மாத்திரைகள் சப்ளை செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. எனவே அதில் தொடர்புடையவர்களை கைது செய்ய மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவிட்டார். அதன் பேரில் தெற்கு துணை கமிஷனர் சீனிவாச பெருமாள் மேற்பார்வையில், திடீர் நகர் உதவி கமிஷனர் ரவீந்திர பிரகாஷ் ஆலோசனையின் பேரில், எஸ்.எஸ்.காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

அவர்கள் போதை மாத்திரை விற்பவர்கள் குறித்து தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது மேலக்கால் மெயின் ரோட்டில் உள்ள பள்ளி அருகே 3 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை சப்ளை செய்வது தெரியவந்தது. உடனே தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று ரகசியமாக கண்காணித்தனர். அப்போது மாணவர்களுக்கு போதை மாத்திரைகளை விற்ற 3 பேரை போலீசார் சுற்றி வளைத்து பிடித்தனர்.

அவர்களிடம் விசாரித்த போது, துவரிமான் முனியாண்டி கோவில் தெருவை சேர்ந்த ரகு (வயது 28), துவரிமான் கணேசபுரம் முத்து (28), எஸ்.எஸ். காலனி அருண் சக்கரவர்த்தி (25) என்பது தெரிய வந்தது. பின்னர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 28 போதை மாத்திரைகள், 2 செல்போன்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்