< Back
மாநில செய்திகள்
தோல்வியடைந்த 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு -ஐகோர்ட்டு உத்தரவு
மாநில செய்திகள்

தோல்வியடைந்த 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணை தேர்வு -ஐகோர்ட்டு உத்தரவு

தினத்தந்தி
|
3 May 2023 4:17 AM IST

தமிழ்நாடு முழுவதும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில், 11-ம் வகுப்பு தேர்வில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கு 3 வாரங்களில் துணைத் தேர்வு நடத்த வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

சென்னை,

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 11-ம் வகுப்பு தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியடைந்தவர்கள், துணைத் தேர்வு எழுத அனுமதிக்கப்படுகிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களை துணைத் தேர்வு எழுத அனுமதிப்பதில்லை. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், மாணவர்கள் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகள் நீதிபதி எம்.தண்டபாணி முன்பு விசாரணைக்கு வந்தபோது, ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த ஒரு மாணவிக்கு, துணைத் தேர்வு எழுத சென்னை ஐகோர்ட்டு, கடந்த 2018-ம் ஆண்டு அனுமதி வழங்கியது. ஒரு பாடத்தில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும், ஒன்றுக்கு மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்த மாணவர்களுக்கும் இடையே பாரபட்சம் காட்டப்படுகிறது என்று மாணவர்கள் சார்பில் வாதிடப்பட்டது.

ஒருமுறை அனுமதி

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கேந்திரிய வித்யாலயா சங்கதன் நிர்வாகம், குறிப்பிட்ட அந்த மாணவி வேறு பள்ளியில் சேர மாற்றுச் சான்றிதழ் பெறுவதற்காகவே துணைத் தேர்வு எழுத ஐகோர்ட்டு அனுமதி வழங்கியது. அது, இந்த வழக்கிற்கு பொருந்தாது. ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வி அடைந்தவர்களுக்கு துணைத் தேர்வு எழுத அனுமதி இல்லை என்று வாதிட்டப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு செல்ல வேண்டும். இது அவர்களின் எதிர்காலம் என்பதால், மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, தமிழ்நாடு முழுவதும் உள்ள கேந்திரிய வித்யாலயாவில் 11-ம் வகுப்பில் ஒன்றுக்கும் மேற்பட்ட பாடங்களில் தோல்வியடைந்தவர்களுக்கு, ஒருமுறை நடவடிக்கையாக 3 வாரங்களில் துணைத்தேர்வு நடத்த வேண்டும் என்று கேந்திரிய வித்யாலயா பள்ளி சங்கதன் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்