காஞ்சிபுரம்
போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கிய போலீஸ் சூப்பிரண்டு
|போலீசார், பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர் இனிப்பு வழங்கினார்.
காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ்துறை எல்லையானது 2 துணைக்கோட்டமும், 12 போலீஸ்நிலையங்களும், 2 மகளிர் போலீஸ் நிலையத்தை உள்ளடக்கி அமைந்துள்ளது. காஞ்சீபுரம் மாவட்டத்தில் 3 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 20-க்கும் மேற்பட்ட இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஒவ்வொரு போலீஸ் நிலையத்திற்கு 50-க்கும் மேற்பட்ட போலீசார், ஆயுதப்படை போலீசார் மற்றும் பயிற்சி போலீசார் என காஞ்சீபுரம் மாவட்டத்தில் தற்போது 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணியில் உள்ளனர்.
இந்த நிலையில் இந்த தீபாவளி பண்டிகையை விபத்து மற்றும் குற்ற செயல்கள் நிகழா வண்ணம் பொதுமக்களுக்கு அளித்திட திட்டமிட்ட காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், இதற்கென குழுக்கள் அமைக்கப்பட்டு, தொடர் பணிகளில் காஞ்சீபுரம் மாவட்டம் முழுவதும் போலீசார் பொதுமக்களுக்கு பாதுகாப்பாகவும், விழிப்புணர்வு செயல் அறிவுரைகளை வழங்கி கடந்த 4 நாட்களாக அனைத்தும் வழிநடத்தப்பட்டது.
அந்த வகையில் காஞ்சீபுரம் நகரில் சிறிது போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்பட்டு பெரிதும் நெரிசல் ஏற்படா வண்ணம் அனைத்து பகுதிகளும் செயல்பட்டது. இந்த செயல் காஞ்சீபுரம் மக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது. அரசு போக்குவரத்து துறை ஊழியர்கள் நெரிசலை குறைக்கும் வகையில் செயல்பட்டதால் போலீஸ்துறை பணியும் சற்று குறைந்தது.
இதே போல் அனைத்து பஸ் நிலையங்களையும் சிறப்பு குற்ற செயல் தடுப்பு போலீஸ் பிரிவினர் நியமிக்கப்பட்டு, தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டதாலும், குற்ற செயல்கள் குறைந்தது பயணிகள் இடையே மகிழ்ச்சியளித்தது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் காஞ்சீபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் சுதாகர், காஞ்சீபுரம் நகரில் பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பாக பணியாற்றியும், தொடர் பணியில் ஈடுபட்டு இருக்கும் போலீஸ் துறையினருக்கு இனிப்புகள் வழங்கி அவர்களை ஊக்குவித்தார்.
இதேபோல் போக்குவரத்து ஊழியர்களான டிரைவர் மற்றும் கண்டக்டருக்கும் விபத்தில்லா காஞ்சீபுரம் மாவட்டத்தை உருவாக்கியதற்கும், நெரிசலற்ற வகையில் சாலையில் பயணிகள் பயணிக்கும் வகையில் செயல்பட்டதற்கும் போக்குவரத்து துறையினருக்கு தீபாவளி வாழ்த்து தெரிவித்து இனிப்பு வழங்கினார்.
இந்த இரு தரப்பினருக்கும் போதிய ஒத்துழைப்பு நல்கிய பொதுமக்களுக்கும், சாலையோர வியாபாரிகளுக்கும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு எம்.சுதாகர் இனிப்புகளை வழங்கி தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தார்.
தீபாவளி நாளில் தங்களுக்கு பணி வழங்கப்பட்டு குடும்பத்தினருடன் இல்லாமல் இருந்த நிலையில், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டின் வாழ்த்து செயல் தங்களுக்கு மேலும் மகிழ்ச்சியை அளித்ததாக போலீசாரும், மாவட்டத்தின் உயர் போலீஸ் அதிகாரி தங்களுக்கும், பயணிகளுக்கும் இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்து சொல்லியது மகிழ்ச்சி அளிப்பதாக போக்குவரத்து துறையினர் தெரிவித்தனர்.