தஞ்சாவூர்
10 கொள்முதல் நிலையங்களில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சோதனை
|தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
தஞ்சை மாவட்டத்தில் உள்ள 10 கொள்முதல் நிலையங்களில் முறைகேடுகள் நடைபெறுகிறதா என உணவுக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார்
தமிழக உணவு கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வு பிரிவு கூடுதல் டி.ஜி.பி. வன்னியபெருமாள் உத்தரவின் பேரில் பொது வினியோக திட்டத்தின் கீழ் மானிய விலையில் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்கி பதுக்கல் மற்றும் கடத்தல் சம்பந்தமான குற்றங்கள் செய்வோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் அலுவலர்கள், விவசாயிகளிடம் போதுமான ஆவணங்களை பெற்றுக்கொண்டு மட்டும் நெல்லை கொள்முதல் செய்ய வேண்டும். விவசாயிகளிடம் கையூட்டு பெறக்கூடாது. விவசாயிகளை காக்க வைக்கக்கூடாது. வியாபாரிகளிடமிருந்து நெல்லை கொள்முதல் செய்யக்கூடாது என்றும் கூடுதல் டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார்.
போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
அதன்பேரில் உணவு கடத்தல் தடுப்பு குற்றப்புலனாய்வு துறை, திருச்சி மண்டல போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தஞ்சையை அடுத்த அசூர், திருவைக்காவூர், வையச்சேரி, மாரியம்மன்கோவில் உள்பட 10 இடங்களில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் கொள்முதல் நிலையத்தில் முறைகேடுகள் நடைபெறுகிறதா? எனவும் ஆய்வு செய்தார்.
முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா?
மேலும் அவர், அங்கு, விவசாயிகளிடம் இருந்து முறையாக கொள்முதல் செய்யப்படுகிறதா? என ஆய்வு செய்ததுடன், வியாபாரிகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறதா? எனவும் கேட்டறிந்தார். மேலும் கொள்முதல் நிலைய ஊழியர்களை அழைத்து, விவசாயிகளிடம் இருந்து எந்த புகாருக்கும் இடமளிக்காமல் நெல் கொள்முதல் செய்ய வேண்டும் எனவும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார்.
இந்த ஆய்வின் போது உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் துணை சூப்பிரண்டு சரவணன், இன்ஸ்பெக்டர் முருகானந்தம் மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.