மதுரை
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம்
|மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் நேற்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடந்தது.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூல திருவிழாவில் நேற்று சுந்தரேசுவரர் பட்டாபிஷேகம் நடந்தது.
வளையல் விற்ற லீலை
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆவணி மூலத்திருவிழாவில் நேற்று காலை வளையல் விற்ற லீலை நடந்தது. அப்போது சுந்தரேசுவரர், மீனாட்சி அம்மன் வளையல் விற்ற லீலை அலங்காரத்தில் காட்சி அளித்தனர். அங்கு சுந்தரேசுவரர் வேடம் அணிந்த பட்டர், வளையல் விற்ற லீலையை நடித்து காண்பித்தார். பின்னர் சுவாமி தங்க பல்லக்கிலும், அம்மன் தங்க பல்லக்கிலும் எழுந்தருளி ஆவணி வீதிகளில் வலம் வந்தனர்.
மதுரையில் சித்திரை முதல் ஆடி வரை நான்கு மாதம் மீனாட்சியும், ஆவணி முதல் பங்குனி வரை 8 மாதங்கள் சுவாமியும் ஆட்சி புரிவதாக ஐதீகம். அதன்படி மீனாட்சி ஆட்சி முடிந்து சுவாமி ஆட்சி பொறுப்பை ஏற்க உள்ளதை முன்னிட்டு சுந்தரேசுவரர் சுவாமிக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நேற்று இரவு நடந்தது. அப்போது சுவாமி சன்னதி ஆறுகால் பீடத்தில் சுந்தரேசுவரர் மீனாட்சியுடன் எழுந்தருளினார். அங்கு அவருக்கு இரவு 7.45 மணிக்கு ராயர் கிரீடம் சூட்டி, ரத்தினங்கள் பதித்த செங்கோல் வழங்கி பட்டாபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் சுவாமியிடமிருந்து செங்கோலை பெற்று அவரது பிரதிநிதியாக மீனாட்சி கோவில் தக்கார் கருமுத்து கண்ணன், 2-ம் பிரகாரம் வலம் வந்தார். பின்னர் அந்த செங்கோலை சுவாமியின் திருக்கரத்தில் சமர்ப்பித்தார்.
புராண வரலாறு
வளையல் விற்ற லீலை குறித்த புராண வரலாறு வருமாறு:
தாருகாவனத்து ரிஷிகள் தங்கள் மனைவியரே கற்பில் சிறந்தவர்கள் என்று செருக்குடன் இருந்தனர். அச்செருக்கை அடக்க எண்ணிய சொக்கநாதர், பிட்சாடனர் கோலத்தில் தாருகாவனத்திற்கு சென்றார். அங்கு பிச்சையிட வந்த அத்தனை ரிஷி பத்தினிகளும் அவரது அழகிலேயே மயங்கி ஆடைகளையும், அணிகலன்களையும் நெகிழ்ந்து நின்றனர். கோபமுற்ற ரிஷிகள் அந்த பெண்களை மதுரையிலே சாதாரண வணிகர் குல பெண்களாக பிறக்கும்படி சபித்தனர். தங்கள் தவறை உணர்ந்து சாபவிமோசனம் கேட்ட பத்தினிகளுக்கு இறைவனே நேரில் வந்து உங்கள் கைகளிலே வளையல் சூடுவார். அப்போது உங்கள் சாபம் தீர்ந்து எங்களை வந்தடைவீர்கள் என்று கூறினார்கள்.
அவ்வாறு ரிஷிபத்தினிகளும் பெண்களாக மதுரையிலே பிறந்து வளர்ந்தனர். அவர்களின் சாபத்தை போக்க இறைவனும் வளையல் வியாபாரியாக தெருவில் வந்து, அவர்களின் கைகளை தொட்டு வளையல் அணிவித்தார். உடனே அவர்களின் சாபம் தீர்ந்து, சிவலோகம் சென்றதாக வரலாறு கூறுகிறது.