தர்மபுரி
வரத்து குறைந்ததால்சுண்டைக்காய் விலை ஒரே நாளில் கிலோ ரூ.10 உயர்வுவிவசாயிகள் மகிழ்ச்சி
|தர்மபுரி மாவட்டத்தில் வரத்து குறைந்ததால் சுண்டைக்காய் விலை ஒரே நாளில் ரூ.10 உயர்ந்துள்ளதால் அதனை சாகுபடி செய்த விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சுண்டைக்காய் சாகுபடி
நுண் ஊட்டச்சத்துக்கள் அதிகம் கொண்ட காய்கறிகளில் ஒன்றான சுண்டைக்காய் தர்மபுரி மாவட்டத்தில் பரவலாக வீடுகள் மற்றும் தோட்டங்களில் சாகுபடி செய்யப்படுகிறது. நார்ச்சத்து, புரதச்சத்து ஆகியவை அதிகம் கொண்ட சுண்டைக்காயில் பொட்டாசியம், மாங்கனிஸ் போன்ற சத்துக்களும் உள்ளன.சுண்டைக்காய் புளிக்குழம்பு மற்றும் வத்தல் குழம்பு ஆகியவை பெரும்பாலான மக்களால் விரும்பி உண்ணப்படுகின்றன. குறிப்பாக சுண்டைக்காய் வத்தல் பிரசித்தி பெற்ற உணவு பொருட்களில் ஒன்றாக உள்ளது. மருத்துவ குணம் கொண்ட சுண்டைக்காய் சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படுகிறது.
ரூ.10 விலை உயர்வு
கசப்பு தன்மை கொண்ட சுண்டைக்காய் நோய் எதிர்ப்பு சக்தியை உடலில் அதிகரிக்கும் தன்மை கொண்டது. குறிப்பாக ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைப்பதற்கு உதவுகிறது. செரிமான பிரச்சினை, கல்லீரல் மண்ணீரல் பாதிப்புகள் இருப்பவர்கள் உணவில் சுண்டைக்காயை சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று பரிந்துரைக்கப்படுகிறது.
தர்மபுரி மாவட்டத்தில் உற்பத்தி அதிகரிப்பு காரணமாக கடந்த சில வாரங்களாக சுண்டைக்காய் விலை குறைந்தது. நேற்று முன்தினம் தர்மபுரி உழவர் சந்தையில் 1 கிலோ சுண்டைக்காய் ரூ.30-க்கு விற்பனையானது. இந்த நிலையில் சந்தைக்கு சுண்டை காய் வரத்து குறைந்ததால் நேற்று ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.10 விலை உயர்ந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று ஒரு கிலோ சுண்டைக்காய் ரூ.40-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ஒரு கிலோ ரூ.50 முதல் ரூ.60 வரை விலைகளில் விற்பனை ஆனது. சுண்டைக்காய் விலை உயர்ந்திருப்பதால் அதை பயிரிடும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.