ஊட்டியில் கோடை சீசன்: மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம்
|ஊட்டியில் கோடை சீசன் தொடங்க உள்ளதால் மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
கோவை,
நீலகிரி மாவட்டத்தின் நுழைவு வாயிலாக மேட்டுப்பாளையம் நகரம் விளங்கி வருகிறது. மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று கொண்டிருக்கின்றன.
தற்போது ஊட்டியில் குளு குளு கோடை சீசன் தொடங்கியுள்ளதால் மேட்டுப்பாளையம் நகரம் வழியாக நீலகிரி மாவட்டத்திற்கு செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மேலும் சனி ஞாயிற்றுக்கிழமைகளில் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து அதிகரித்து வாகன நெரிசலும் காணப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
இதனை கருத்தில் கொண்டு மேட்டுப்பாளையத்தில் இன்று முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-
கோடை காலம் விடுமுறை வருவதால், வரும் நாட்களில் ஊட்டி, மேட்டுப்பாளையம் மற்றும் பிற மலைப்பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கு சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகமாக வரக்கூடும். எனவே வாகன போக்குவரத்து அதிகரிப்பதால், போக்குவரத்து நெருக்கடி ஏற்படாமல் தவிர்க்கும் வகையில் மாவட்ட காவல்துறையின் சார்பில் மேட்டுப்பாளையம் நகரில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் 2 மாதங்களுக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சுற்றுலா வாகனங்கள் மேட்டுப்பாளையம் நகருக்குள் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை.
பாரத் பவன் ரோடு -ரெயில்வே ஸ்டேஷன் ரோடு - சிவம் தியேட்டர் - சக்கரவர்த்தி ஜங்ஷன் வழியாக நீலகிரிக்கு செல்ல வேண்டும். நீலகிரியில் இருந்து கோத்தகிரி வழித்தடத்தில் வரும் வாகனங்கள்;ராமசாமி நகர் - பாலப்பட்டி - வேடர் காலனி - சிறுமுகை ரோடு - ஆலங்கொம்பு ஜங்ஷன்- தென்திருப்பதி 4 ரோடு - அன்னூர் சாலை வழியாக திருப்பி விடப்பட்டு அவ்வழியாக கோவை, ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களுக்கு செல்ல வேண்டும்.
நீலகிரியில் இருந்து குன்னூர் வழியாக வரும் வாகனங்கள் பெரிய பள்ளிவாசல் - சந்தக்கடை - மோத்தைபாளையம் - சிறுமுகை ரோடு - ஆலாங்கொம்பு - தென்திருப்பதி 4 ரோடு சந்திப்பு வழியாக திருப்பி விடப்படும். மேட்டுப்பாளையம் - சிறுமுகை இடையே ஒரு வழி பாதையாக மாற்றம் செய்யப்படும்.
சத்தியமங்கலம் பண்ணாரி - ஈரோட்டிலிருந்து சிறுமுகை வழியாக மேட்டுப்பாளையம் செல்ல விரும்புவோர் ஆலங்கொம்பு - தென் திருப்பதி 4 ரோடு - அன்னூர் சாலை வழியாக அனுமதிக்கப்படுவார்கள். மேலும் மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்தை சீரமைக்க தேவையான போலீசார் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணியில் ஈடுபடுவார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.