தமிழ்நாட்டில் ஆரம்பித்த கோடை மழை... அடுத்தடுத்த 2 நாட்கள் கனமழைக்கு வாய்ப்பு
|தமிழ்நாட்டில் எங்கெங்கு கனமழை பெய்யும் என்பது குறித்த தகவல்களை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் பொதுவாக மார்ச் மாதத்தில் இருந்தே கோடை மழை ஓரளவுக்கு பெய்யத் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு கோடை காலம் வாட்டி வதைக்க தொடங்கியதில் இருந்து இதுவரை கோடை மழை பரவலாக பெய்யவில்லை.
கடந்த மார்ச் மாதம் முதல் நேற்றைய நிலவரப்படி, சராசரியாக 7 செ.மீ. மழை பதிவாகியிருக்க வேண்டும். ஆனால் ஒரு செ.மீ. மழைதான் பெய்துள்ளது. அதிலும் சில குறிப்பிட்ட இடங்களில் மட்டும் லேசான சாரல் மழையை மட்டும் தூவி வருவதை பார்க்க முடிகிறது.
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக தென் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், அதனையொட்டிய பகுதிகளில் மழை பெய்யத் தொடங்கி இருக்கிறது.
இதன் தொடர்ச்சியாக பிற இடங்களிலும் மழைக்கான வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருக்கிறது. இதன் மூலம் தமிழ்நாட்டில் கோடை மழை தாமதமாக பெய்ய ஆரம்பித்து இருக்கிறது.
அதன்படி, தென் இந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
கனமழை பெய்யும் இடங்கள்
அதனைத்தொடர்ந்து 7-ந்தேதி (நாளை மறுதினம்) தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழையும், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரியில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது.
அதேபோல், 8-ந்தேதி (புதன்கிழமை) .தமிழ்நாட்டில் சில இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழையும், கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், திருப்பூர், விருதுநகர் மாவட்டங்கள், தென்காசி, நெல்லை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.