< Back
மாநில செய்திகள்
கத்திரி வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை
திருச்சி
மாநில செய்திகள்

கத்திரி வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை

தினத்தந்தி
|
27 May 2023 1:09 AM IST

கத்திரி வெயிலின் தாக்கத்தை தணித்த கோடை மழை பெய்தது.

வாட்டி வதைத்த கத்திரி வெயில்

கோடையின் உச்சம் என்று சொல்லப்படும் அக்னி நட்சத்திரம் எனும் கத்திரி வெயில் கடந்த 4-ந்தேதி தொடங்கியது. வருகிற 29-ந்தேதி வரை கத்திரி வெயில் நீடிக்கும் என்று கூறப்படுகிறது. ஆனால் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு ஒரு வாரத்துக்கு முன்னதாகவே தமிழகத்தில் கோடை மழை பரவலாக பெய்தது.

திருச்சியில் அக்னிநட்சத்திரம் தொடங்கிய 4-ந்தேதி முதல் 11-ந்தேதி வரை கோடை மழை பெய்தது. இதனால் அந்த நாட்களில் வெயிலின் தாக்கம் தெரியவில்லை. பின்னர் கோடை மழை பெய்யாத நிலையில், மீண்டும் வெயிலின் தாக்கம் அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2 வாரமாக திருச்சியில் கத்திரி வெயில் பொதுமக்களை வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

பலத்த மழை

இந்தநிலையில் நேற்று காலையில் வெயில் ஓரளவு காணப்பட்டது. பிற்பகலில் வெயிலின் தாக்கம் குறைந்து வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. நேற்று மாலை 4 மணி அளவில் திருச்சி மற்றும் சுற்றுப்புற பகுதியில் பல இடங்களில் திடீரென வானில் கருமேகங்கள் திரண்டு, மழை பெய்யத்தொடங்கியது. இந்த மழை இரவு வரை நீடித்தது.

திருச்சி ஜங்ஷன், சத்திரம் பகுதி, பொன்மலை, விமான நிலையம், பாலக்கரை, உறையூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. இதன் காரணமாக மாநகரமே குளிர்ந்தது. இதனால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.

மணிகண்டம்

மணிகண்டம் பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்ததால் அனல் காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் பெரும் சிரமம் அடைந்தனர். இந்நிலையில் நேற்று மாலை மணிகண்டம், நாகமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் வானில் கருமேகம் சூழ்ந்து பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. தொடர்ந்து இரவு 9 மணி வரை அடை மழையாக பெய்து கொண்டே இருந்தது.

மேலும் அளுந்தூர், பாத்திமாநகர், இனாம்மாத்தூர், மேக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழை பெய்தது. இந்த மழையால் சாலையோரம் மற்றும் தாழ்வான பகுதிகள், வயல்வெளிகளில் மழைநீர் தேங்கி நின்றது. திடீரென நேற்று பெய்த மழையால் மணிகண்டம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்த மழை மானாவாரி உழவு பணிக்கு மிகவும் உதவியாக இருக்கும் என்று விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்