தமிழ்நாடு, புதுச்சேரியில் 3 நாட்களுக்கு கோடை மழை
|தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 3 நாட்களுக்கு மிதமான கோடை மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சென்னை,
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை நிறைவு பெற்ற பின்னர், வெயில் வாட்டி வதைக்க தொடங்கி இருக்கிறது. இன்னும் அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்தரி வெயில் தொடங்குவதற்கு முன்னதாகவே வெயில் தன்னுடைய கோர முகத்தை காட்ட தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் நேற்று சில இடங்களில் திடீர் மழை பெய்தது. இது கோடை மழை என்று வானிலை ஆய்வு மையம் கூறும் சூழ்நிலையில், இந்த மழை மேலும் 3 நாட்களுக்கு சில இடங்களில் தொடரும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
3 நாட்களுக்கு...
தென் தமிழகம் முதல் மத்திய பிரதேசம் வரை வடக்கு, தெற்காக கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கின்ற பகுதி வளிமண்டலத்தில் நிலவி வருகிறது. இதன் காரணமாக, இன்று (சனிக்கிழமை) முதல் 20-ந்தேதி (திங்கட்கிழமை) வரை 3 நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரியில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை கோடை மழை பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு ஓரளவுக்கு இருக்கிறது.
சென்னை, புறநகரை பொறுத்தவரையில் அடுத்த 2 தினங்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வெப்பநிலை
மார்ச், ஏப்ரல், மே மாதங்கள் சேர்ந்தது தான் கோடை காலம். இந்த காலகட்டத்தில் பகல் நேர வெப்பநிலை அதிகமாகவும், இரவு நேர வெப்பநிலை குறைவாகவும் இருக்கும். இந்த கோடை காலத்தில் கடலோர மாவட்டங்களில் இயல்பை விட சற்று அதிகமாகவும், உள் மாவட்டங்களில் இயல்பையொட்டியும் வெப்பநிலை பதிவாகும்.
இவ்வாறு அவர் கூறினார்.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில், 'பெருஞ்சாணி அணை, புத்தன் அணை தலா 6 செ.மீ., சிவகிரி 5 செ.மீ., வத்திராயிருப்பு, சின்கோனா, பெரியார், திற்பரப்பு தலா 4 செ.மீ., சுருளக்கோடு, பேரையூர், கோபி செட்டிப்பாளையம், தேன்கனிக்கோட்டை, இரணியல், கொடிவேரி தலா 3 செ.மீ. உள்பட சில இடங்களில் மழை பெய்திருக்கிறது.