தர்மபுரி
அரூரில்பலத்த காற்றுடன் கோடை மழை
|அரூர்
அரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயில் சதம் அடித்து வந்தது. அதாவது 100 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகியது. இதனால் மதிய வேளைகளில் பொதுமக்கள் தங்களது வீடுகளிலேயே முடங்கினர். அரூர் நகரில் நேற்று முன்தினம் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை திடீரென கோடை மழை கொட்டித்தீர்த்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் ஆறாக ஓடியது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டு, ஊர்ந்தபடி சென்றன. மழையின் போது பலத்த காற்று வீசியதால் ஆங்காங்கே மரங்கள் சாய்ந்தன. அரூர் பொதுப்பணித்துறை அலுவலர்கள் குடியிருப்பில் ஒரு வீட்டின் மீது மரம் முறிந்து விழுந்தது. இதேபோல் அச்சல்வாடி, கீழானூர் பகுதியிலும் மரங்கள் முறிந்து விழுந்தன. பலத்த காற்றுக்கு பல ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்த வாழை, பப்பாளி மரங்கள் சாய்ந்தன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.