கொடைக்கானலில் கோடைவிழா நாளை தொடங்குகிறது
|கொடைக்கானல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது.
திண்டுக்கல்,
'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலில் தற்போது குளு, குளு சீசன் நடந்து வருகிறது. இதனை அனுபவிக்க தமிழகம் மட்டுமின்றி வெளிமாநிலங்கள், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகள் வந்த வண்ணம் உள்ளனர்.
சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் ஆண்டுதோறும் கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 61-வது மலர்கண்காட்சியுடன் கோடை விழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் தொடங்குகிறது.
கோடைவிழாவை வரவேற்கும் வகையில் பிரையண்ட் பூங்காவில், பல வண்ணங்களில் லட்சக்கணக்கான பூக்கள் பூத்துக்குலுங்குகின்றன. இதேபோல் பூக்களை கொண்டு பல்வேறு உருவங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. பூங்கா வளாகத்தில் பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.
கொடைக்கானல் பகுதியில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. சாரல் மழையில் நனைந்தபடியும், குடைகளை பிடித்தவாறும் பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட சுற்றுலா இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். ஏரிச்சாலையை சுற்றி சைக்கிள் சவாரி, குதிரை சவாரி செய்து உற்சாகம் அடைந்தனர்.
பொதுவாக கொடைக்கானலில் கோடைவிழா-மலர் கண்காட்சி தொடக்க விழா என்றால், கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். தங்கும் விடுதிகள் நிரம்பி வழியும். ஆனால் இ-பாஸ் நடைமுறை அமல்படுத்தப்பட்ட பிறகு சுற்றுலா பயணிகளின் வருகை குறைந்துள்ளது.