சென்னை
இளம்பெண் தற்கொலை முயற்சி; என்ஜினீயர் கைது
|இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக என்ஜினீயரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை நொளம்பூர் பகுதியை சேர்ந்தவர் சம்பக் (வயது 33). சாப்ட்வேர் என்ஜினீயர். இவர், தியாகராயநகரைச் சேர்ந்த 33 வயது இளம்பெண்ணை காதலித்து வந்தார். இருவரும் திருமணம் செய்து கொள்ளாமலேயே போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கல் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் கடந்த ஒரு வருடமாக கணவன்-மனைவி போல் சேர்ந்து வாழ்ந்து வந்தனர்.
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் விரக்தி அடைந்த அந்த பெண், சானிடைசர் மற்றும் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை தின்று தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரது உறவினர்கள் இளம்பெண்ணை மீட்டு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். அவரிடம் மாஜிஸ்திரேட்டு மற்றும் போலீசார் வாக்குமூலம் பெற்றனர்.
சம்பக்கும், இளம்பெண்ணும் கடந்த ஒரு வருடமாக திருமணம் செய்யாமலேயே ஒரே வீட்டில் கணவன்-மனைவி போல் வாழ்ந்து வந்தனர். இதற்கிடையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு சம்பக்கிற்கு வேறொரு பெண்ணுடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்ததாக தெரிகிறது. இது தொடர்பாக இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் தற்கொலைக்கு முயன்றது தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்த போலீசார், இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டியதாக சம்பக்கை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.